Abstract:
வரலாற்று ரீதியான ஆய்வு முறையில் சான்றுகள் முக்கியமானது. அதிலும் இலக்கியச் சான்றுகளை விட தொல்லியற் சான்றுகள் சமகாலத்து ஆவணங்களையும் உண்மைத் தன்மையை வெளிக்காட்டுவதில் முதன்மையான ஆதாரங்களாக விளங்குகின்றன. சமகாலத்தில் வரலாற்றுச் சான்றுகள் தொடர்பான விழிப்புணர்வின்மையால் அவை உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை. அத்தோடு சில சான்றுகள் தற்காலத்தில் திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயங்களாகும். இச்செயற்பாடுகள் ஒர் இனத்தின் அடையாளத்தை அல்லது ஓர் சமூகத்தின் வரலாற்றை அறிந்துகொள்வதில் பாரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் வடுக்களையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே காலத்தின் தேவைகருதி தொல்லியற் சான்றுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.
இவ்வாய்வுக் கட்டுரையானது மறைக்கப்படுகின்ற தொல்லியல் மூலாதாரங்களால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை காரணகாரிய அடிப்படையில் விபரிப்பதுடன் அவற்றுக்கான தீர்வாலோசனைகளை முன்வைப்பதாகவும் அமைந்துள்ளது. அத்தோடு தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமங்கள் தோறும் தொல்லியல் மற்றும் பண்பாட்டு குழுக்களை அமைத்து வரலாற்றுச் சான்றுகளையும் தமிழர் பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தலும் அவசியமாகின்றது.
யுத்தத்தின் பின்னரான மறைமுக செயற்பாடுகள் சமூக நல்லிணக்கம் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றில் பின்னடைவைத் தோற்றுவித்துள்ளன. குறிப்பாக தமிழர்களின் வரலாறும் மறைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் குசலானமலை, பங்குடாவெளி, ஆரையம்பதி கோவில்குளம், ஆலங்குளம், கன்னியா வெந்நீரூற்று, கன்னியாகுமாரி பிள்ளையார் ஆலயம், சம்மாந்துறை பிள்ளையார் ஆலயம், பொலன்னறுவைக்கால இந்துக் கோவில்கள் வரலாற்று முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளன. எனவே இப்பிரதேசங்களை மையப்படுத்தியதாகவே இவ்வாய்வு அமைகின்றது. ஆய்வு அணுகுமுறையாக அளவு ரீதியான பண்புகளை ஒப்பீட்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது.
எனவே ஈழத்தமிழர் வாழும் பிராந்தியங்கள் இன்று ஏனைய சமூகங்களால் ஆக்கிரமிக்கும் சூழலும் வரலாறுகள் திரிபுறும் நிலையும் உருவாகியுள்ளது. இவ்வாய்வு உண்மைத்தன்மையை வலியுறுத்தும் சான்றுகளின் ஊடாக வெளிப்படுத்தி அவற்றை பாதுகாக்கும் ஆரம்ப முயற்சியாகவே அமைகின்றது.