dc.description.abstract |
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மனிதனின் வாழ்வியலை
செம்மைப்படுத்துவதில் மெய்யியலின் பங்கு பிரதானமானது. மனித வாழ்வியலுக்கு
சவாலாக அமையும் பல்வேறு எண்ணக்கருக்களைப் பகுப்பாய்வு செய்து அதனை
கோட்பாட்டுத் தளத்திலிருந்து நடைமுறை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி மனித
வாழ்வியலை மகிழ்ச்சிகரமாக அமைப்பதற்கு மெய்யியல் ஆய்வுகள் அடிப்படையாக
அமைகின்றன. அந்த வகையில் சமகாலத்தில் மனித சமுதாயத்திற்கு தேவையான
நீதி என்ற எண்ணக்கருவினையும் மெய்யியல் தனது ஆளுகைக்குள் உட்படுத்திக்
கொண்டது. சமூக மெய்யியலின் ஒரு பிரிவே அரசியல் மெய்யியலாகும். இவ்வரசியல்
மெய்யியலில் பகுப்பாய்வு செய்யப்படும் நீதி என்ற எண்ணக்கரு ஒழுக்க மெய்யியல்,
அரசியல், சட்டம் போன்றவற்றிலும் பேசப்படுகின்ற ஒரு முக்கிய எண்ணக்கருவாக
அமைந்துள்ளது. நீதி பற்றிய ஆய்வில் எது நீதி?, நீதியையும், அநீதியையும்
பிரித்தறிவதற்கான சரியான கட்டளைக் கற்கள் உள்ளனவா? முதலான பல
பிரச்சினைகள் உள்ளன. நீதி தொடர்பாக பல்வேறுபட்ட வியாக்கியானங்கள்
காணப்படுவதற்கு காரணம் அது பல்வேறு தளங்களில் நின்று தொழிற்படுவதாகும்.
பிளேட்டோ பேசும் நீதியின் உள்ளடக்கமாக உரிமை, அறம், நடத்தை, நடுநிலைமை
தவறாமை, மரபொழுக்கம் போன்றவை காணப்படுகின்றது. ஞானம், தன்னடக்கம்,
வீரம் என்பவற்றை நீக்கிப்பார்த்தால் நீதி மட்டுமே மிஞ்சும், இது மற்ற எல்லா
நல்லவற்றிற்கும் காரணமாயும், அவை நிலை பெறுவதற்கு நிலைக்களனாகவும்,
அவற்றை பாதுகாப்பதாகவும் நீதி உள்ளது எனப் பிளேட்டோ குறிப்பிடுகின்றார்.
மனிதனது கடமையாகவும் விதியாகவும் அமையும் பிளேட்டோ பேசும் நீதி பற்றிய
அரசியல்சார் மெய்யியல் பார்வையினை ஒப்பீடு, பகுப்பாய்வு, விமர்சனம் போன்ற
ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி ஆராய இக்கட்டுரை முனைகிறது.
திறவுச் சொற்கள் : கடமை, விதி, நீதி, அரசியல் மெய்யியல், பகுப்பாய்வு |
en_US |