Abstract:
தற்கால பின்நவீன சமூகத்தில் ஊடகங்கள் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை
மதிப்பீடு செய்வதாக ஜான் போர்டிரியரின் சிந்தனைகள் காணப்படுகின்றன. மாக்ஸிசம்,
கட்டமைப்பு வாதம், பிற்கட்டமைப்பு வாதம் மற்றும் மொழியியல் போன்ற பல்வேறு
அறிவுத்துறைகளின் செல்வாக்குக்கு உட்பட்ட போர்டிரியர், ஊடக மெய்மை எவ்வாறு
மக்களை அந்நியமாதல் செயல்முறைக்கு உட்படுத்துகின்றது? என்பதை பல்வேறு
பரிமாணங்களிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். ஊடகங்கள் (குறிப்பாக இலத்திரனியல்
ஊடகங்கள்) மெய்மையினை மறைப்பதாகவும் கற்பனை சார்ந்த மெய்மையினை
உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டும் போர்டிரியர், நுகர்வுச் சமூகத்தில் ஊடகங்கள்
வரையறையற்ற செல்வாக்கினை மக்கள் மத்தியில் கொண்டிருப்பதாகவும் மக்களை
ஒரு வகை மாயை உலகத்தில் சஞ்சரிப்பவர்களாகவும் மாற்றுகின்றது என்றும்
குறிப்பிடுகின்றார். இலத்திரனியல் ஊடகங்கள் உருவாக்கும் ஊடக மெய்மை
விம்பங்களையும் குறியீடுகளையும் பொருட்களாக நுகரச் செய்யும் ஒரு உலகத்தினை
உருவாக்கியிருப்பதாக வாதிடும் போர்டிரியர் இந்த ஊடக மெய்மை மக்களை
மனிதத்துவத்திலிருந்து தீவிரமாக அந்நியப்படுத்தி வருகிறது என்ற கருத்தினை
பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபிக்க முயல்கின்றார். ஊடக மெய்மை மக்களை
அந்நியப்படுத்துகின்றது என்ற போர்டிரியரின் வாதத்தை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு
செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. மெய்யியலுக்கேயுரிய ஆய்வுமுறைகளான
நம்பிக்கைகள் பற்றிய விமர்சன ரீதியான மதிப்பீட்டு முறை,எண்ணக்கருக்களின்
தெளிவுபடுத்துகை முறை , பகுப்பாய்வு முறை, தொகுப்பு முறை, ஒப்பீட்டு முறை,
விமர்சன மற்றும் முழுமை முறை என்பன இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மனிதர்களின் உள ரீதியான பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஊடக
மெய்மை மற்றும் அந்நியமாதல் தொடர்பான மதிப்பீடு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.