Abstract:
பிறப்பின் அடிப்படையில் வருவது 'பால்' ((Sex) என்ற எண்ணக்கருவாகும். அது ஆணையும் பெண்ணையும் குறிக்கிறது.
அது சமூகமயமாக்கல் செயற்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற போது 'பால்நிலை' (Gender) எனப்படுகிறது.
'பால்நிலை சமத்துவம்' என்பது 'பால்' எனும் வேறுபாட்டுக்கு அப்பால் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்பதைக்
குறிக்கின்றது. சமத்துவம், நீதி என்பன இரு வேறுபட்ட பதங்களாகும். சமத்துவம் (Equality) என்பது ஒரு விடயத்தில்
எல்லோருக்கும் சம நிலை வழங்கப்படுவதை அல்லது பேனுவதைக்குறிக்கும். நீதி (Justice) என்பது ஒரு விடயம்
(சமத்துவம்) பொது விதியாக இருக்கத்தக்கதாக ஆண், பெண் இருபாலாருடைய இயல்பு, உணர்வு, தண்மை, அமைப்பு,
பண்பு, குணம் போன்ற வேறுபாடுகளுக்கு ஏற்ப, அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை, சட்டம், அனுமதி, தடை
எனலாம். பால்நிலை சமத்துவம் மற்றும் நீதி பற்றிய உரையாடல்கள் அண்மைக் காலங்களாக ஊடகங்கள்,
கருத்தரங்குகளில் பேசு பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக இஸ்லாத்தில் இருபால்நிலை சமத்துவம், நீதி, உரிமைகள்,
சுதந்திரம் பற்றிய கருத்தாடல்களைக் குறிப்பிடலாம். இலங்கையில் கூட இவை போன்ற விடயங்கள் விவாதத்துக்
குள்ளாக்கபட்டு வருகின்றன. இந் நிலையில் இஸ்லாத்தின் இரு பால் சமத்துவம் மற்றும் நீதி பற்றிய பொதுவான
சிந்தனைகளை அல்குர்ஆன், அல் ஹதீஸிலிருந்து வெளிக்கொணருவதும், குறிப்பாக விவாக விவாகரத்து விடயத்தில்
இஸ்லாம் முன்வைக்கின்ற பால்நிலை சமத்துவம், நீதி பற்றிய கருத்துக்களை ஆராய்வதுமே இவ் ஆய்வின்
நோக்கங்களாகும். இஸ்லாத்தின் பால் நிலை சமத்துவம்,நீதி பற்றிய கருத்தியல்கள், குறிப்பாக விவாக, விவாகரத்து
விடயத்திலுள்ள சமத்துவம், நீதி குறித்து எழுந்துள்ள கீழைத்தேய ஆய்வாளர்களின் தவறான புரிதல்கள்
நியாயமானவையா? இஸ்லாம் பெண்களைத் தாழ்த்தியும் ஆண்களை உயர்நிலைப்படுத்தியும் பாரக்கின்றதா? என்பன
இங்கு ஆய்வுப்பிரச்சினைகளாகும். இஸ்லாத்தின் பால்நிலை சமத்துவம்,நீதி குறித்த கருத்தியல்கள் இரு பாலாரின்
அனைத்து செயற்பாடுகளிளும் அவாவி நிற்கின்ற போதிலும் குறிப்பிட்ட இரண்டு விடயங்களை மாத்திரம் இவ் ஆய்வு
வரையறுத்துள்ளது. இஸ்லாம் இருபாலாரையும் சமமாகவும் நீதியாகவும் நோக்குகிறது என்பதுடன் ஆண், பெண் என்ற
பால் வேறுபாடு உயர் நிலை, தாழ் நிலை குறியீடல்ல. மாறாக இருபாலாரும் சமபாதி, சரிபாதி என்பதே இஸ்லாத்தின்
நிலைப்பாடாகும் என்பதை நிறுவுவதற்காக இஸ்லாமிய அடிப்படை மூலாதாரங்களான அல் குர்ஆன், அல்ஹதீஸ்
கிரந்தங்களை முதற்தர தரவுகளாகவும் இவைபற்றி எழுதப்பட்டுள்ள சில நூல்கள், கட்டுரைகளை இரண்டாம் நிலைத்
தரவுகளாகவும் கொண்டு பன்புசார் ஆய்வு முறைமையைக் கையாண்டு இவ்ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இஸ்லாத்தின் பால்நிலை சமத்துவம், நீதி பற்றிய பார்வை நேர்மையானதும் தெளிவானதும் என்பதை முடிவாக இங்கு
இக்கட்டுரை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது.