dc.description.abstract |
அரசுகள் தமது தேசிய நலன்களைச் சர்வதேச மட்டத்தில் சாத்தியமாக்கிக் கொள்வதற்கு வெளியுறவுக் கொள்கையைப் பயன்படுத்துகின்றன. எந்தவொரு நாடும் உலக அரங்கில் தனித்து வாழாது, மற்றைய நாடுகளுடன் தொடர்புகொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாயினும் அந்நாட்டின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகளின் தலையீடானது மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட வேண்டும். இல்லையாயின் ஒரு நாட்டின் சுயாதிபத்தியம், இறைமை என்பன பாதிக்கப்படும் மனித உரிமைகள் என்பது எப்போதும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஒரு நாட்டின் அதிகாரமானது இறைமை வழி இயங்குவதற்கான நெறிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அரசுகள் மனித உரிமைகளில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இல்லையாயின், ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகளின் தலையீடுகள் தவிர்க்க முடியாததாகிவிடும். ஓர் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகையில் அந்நாடு அது பற்றிய பொறுப்புக்கூறலை செய்யவைப்பதற்கும் சர்வதேசத்தின் பங்கு இன்றியமையாது. இலங்கையானது நீண்டகால யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல்களின் விளைவால் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு உள்ளாகித் தனது அபிவிருத்திற்கும், பாதுகாப்பிற்கும் சர்வதேச நாடுகளில் தங்கியிருக்கும் ஓர் நிலை உருவாகியது. இது ஆரோக்கியமற்ற ஓர் நிலைப்பாடாகும். இந்நிலை இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய தாக்கத்தைச் செலுத்துவதோடு அதனை வெற்றிகொள்ளும் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவ்வகையில், யுத்தத்தின் பின்னரான இலங்கையின் மனித உரிமை நிலையானது இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில் எவ்வாறான நேர்க்கணிய மற்றும் எதிர்க்கணிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி இங்கு ஆராயப்படுகின்றது. யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் நிகழும் மனித உரிமை மீறல்கள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் பல நாடுகள் தலையீடுவதற்கு ஏதுவாகின்றன. இதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கை அழுத்தங்களுக்கு உள்ளாவதுடன் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன்விளைவாக இலங்கையின் சுதந்திரம், இறைமை, சுயாதிபத்தியம், தன்னாதிக்கம் பாதிக்கப்படுகின்றன. சர்வதேச அழுத்தங்களினால் இலங்கை அரசானது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய நாடுகளின் பக்கமாகத் தனது வெளியுறவுக் கொள்கையை வகுக்கின்றது. இதன் காரணமாக சுய பாதுகாப்பிற்காக ஏனைய நாடுகளிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்பு ரீதியான ஆய்வு முறையினைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. |
en_US |