Abstract:
இந்திய மெய்யியல் பரப்பில் வேதாந்திகளும், வேதாந்தக் கருத்துக்களும் பல்வேறுபட்ட ஆய்வுத் தேடலுக்கான தளமாக அமைந்துள்ளன. குறிப்பாக முப்பொருள் தத்துவ உண்மைக்கான தேடல் வேத அந்தமாகிய வேதாந்தம், அல்லது வேதசிரசு எனப்படும் உபநிடதகாலம் முதல் நிகழ்ந்தேறிவந்துள்ளது. குறிப்பாக சங்கரரின் அத்வைத வேதாந்த மரபினை நிராகரித்து முப்பொருள் தத்துவங்களுக்கான வியாக்கியானத்தை சங்கரருக்கு பின்வந்த வேதாந்திகள் முன்வைக்கத் தொடங்கிய காலத்தில் மேலும் விரிவடைந்தது. அந்தவகையில் தமிழில் வைக்ஷ்ணவவேதாந்த மரபிலே பேசப்படுகின்ற வேதாந்திகளாக இராமானுஜரும் அவரது விசிட்டாத்வைதமும், மத்துவரும் அவரது துவைத வேதாந்தமும் முக்கியமாக எடுத்தாளப்பட்டுள்ளன. நிம்பாக்கரின் வேதாந்தச் சிந்தனையானது அவருக்கு முன்பு தோற்றம் பெற்ற வேதாந்த முறைமைகளை உள்வாங்கியும், அவற்றில் இருந்து வேறுபட்டும் இருமைவாத, ஒருமைவாதக் கருத்துக்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஆனாலும் நிம்பாக்கரினதும், அவரது வைக்ஷ்ணவவேதாந்தச் சிந்தனையான துவைதாத்வைதம் அல்லது பேதாபேதக் கொள்கையானது தமிழில் அதிகமாக வெளிக்கொணரப்படாத நிலையே இன்றும் நிலவுகின்றது. இவ்வாய்வானது அக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதோடு நிம்பாக்கரின் வேதாந்தச் சிந்தனையை வெளிக் கொணர்வதனை நோக்கமாகவும் கொண்டு அமைகின்றது. வேதாந்தம் சார்பான நூல்கள், நிம்பாக்கரின் உரைநூல்கள், அதனோடு தொடர்புபட்ட வைக்ஷ்ணவ வேதாந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் நூல்கள் ஆய்வுக் கட்டுரைகள் என்பன ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அவற்றில் இருந்து ஒரு விபரணரீதியான பகுப்பாய்வாக இவ்வாய்வு அமைந்து இருக்;கின்றது. விசேடமாக வைக்ஷ்ணவவேதாந்திகளான இராமானுஜர் மத்துவர் பாஸ்கரர் வல்லபர் சைதன்னியர் போன்றோர்களில் இருந்து வேறுபட்ட விதமாக நிம்பாக்கர் தனது வேதாந்தக் கருத்தை எவ்வாறு எடுத்துக்காட்டியுள்ளார் என்பதனையும் வைக்ஷ்ணவ வேதாந்தத்தில் அதன் தாக்கம் எவ்வாறு காணப்படுகின்றது என்பதனையும் எண்பிப்பதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.