Abstract:
கடந்தகால மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலிருந்து குறிப்பாக 2011 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பாரியளவில்; நீண்டகால முதலீடுகளைச் சீனா மேற்கொண்டு வருகிறது. கொழும்பு தெற்குத் துறைமுகத்தின் தொடர்ச்சியாகக் காலிமுகத்திடலில் 269 ஹெக்டெயர் கடல்பகுதியை மணல்கொண்டு நிரப்பிப் புதிய நிலப்பகுதியை உருவாக்குவதன் மூலம் கொழும்புச் சர்வதேச நிதி நகரம் என்ற புதிய சிறிய நகரத்தை 1.5 பில்லியன் டொலர் பெறுமதியில் கட்டமைத்து வருகின்றது. இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் பொருளாதாரச் செல்வாக்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் இராணுவத் திறன்களும் பூகோள அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சர்வதேசளவில் சீனாவுடன் போட்டி போடுகின்ற இந்தியா, யப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளதாக உணருகின்றன. 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இப்புதிய பதற்றத்தை நீக்குவதற்கான தந்திரோபாய ஆட்சி மாற்றமாக சீனாவின் போட்டி நாடுகளால் கருதப்பட்டன. புதிய ஆட்சியாளர்கள் சீனாவுடன் நடாத்திய தொடர் இராஜதந்திர மட்டப் பேச்சுவார்த்தையின் பயனாகக் கொழும்பு சர்வதேச நிதி நகரத்தின் மூலம் ஏற்பட்டிருந்த பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கொழும்புச் சர்வதேச நிதி நகரம் தனித்துச் சீனாவின் முதலீட்டிற்கான நகரமாக மாத்திரமன்றிச் சர்வதேச நாடுகள் முதலீடு செய்யும் நிதி நகரமாகப் புதிய ஆட்சியாளர்களால் மாற்றியமைக்கப்பட்டது. இலங்கைக்குப் பொருளாதார உதவிகளைச் செய்வதன் மூலம் சர்வதேச நலன்களையடைதல் என்ற தந்திரோபாயத்தில் சர்வதேச நாடுகள் பங்கெடுக்கும் வகையில் புதிய அரசாங்கம் தனது வெளியுறவுக் கொள்கையினை மறுசீரமைத்துக் கொண்டது. சீனாவின் முழுமையான ஆதரவு இல்லாமல் இலங்கையின் புதிய ஆட்சியாளர்களால் இதனைச் சாதித்திருக்க முடியாது.