Abstract:
இலங்கை பல்லின, பல மொழி பேசுகின்ற பல்வேறு சமய, கலாசார பாரம்பரியங்களைக் கொண்ட ஒரு நாடாகும். அரேபியர் இஸலாத்திற்;கு முற்பட்ட காலம் முதலே இலங்கையுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தன் காரணமாக அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய ஆரம்ப காலப்பிரிவிலேயே இலங்கையிலும் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது. ஐரோப்பியர் வருகை முதல் அரேபியருடனிருந்த நெருக்கமான தொடர்பு வெகுவாகக் குறைந்ததாலும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலையங்கள் போர்த்துக்கல், ஒல்லாந்த ஆட்சியாளர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டதாலும் சமய, கலாசார முன்னேற்றம் தடைப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி குன்றியது. இலங்கை முஸ்லிம்கள் பௌத்த, இந்து கலாசாரப் பாரம்பரியங்களைப் பின்பற்றி வாழும் மக்களிடையே வாழ்ந்து வருவதால் அக்கலாசாரங்களின் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் பரம்பரை பரம்பரையாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகின்ற போதிலும், கல்வித் துறையில் பின்னடைந்திருப்பதால் இஸ்லாம் மார்க்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் இஸ்லாத்துக்கு மாற்றமான சடங்குகள், சம்பிரதாயங்களை இஸ்லாமாகக் கருதி பின்பற்றும் சூழ்நிலையும் உருவாகியது. மார்க்க வழிகாட்டல்கள் உரிய முறையில் கிடைக்காததால் ஆன்மீகத் துறையைப் புறக்கணித்து, லௌகீகத் துறையை இலட்சியமாகக் கொண்டு வாழும் நிலையும் தோன்றிது. இவற்றிலிருந்து இலங்கை முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தனி நபர்களாலும், ஸ்தாபன ரீதியான அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. எனவே, அவர்களிடையே ஆத்மீக ரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் ஓரிரு உள்ளூர், வெளியூர் முஸ்லிம்கள் தனிநபர்களாகவும், சூபித்துவ தரீக்காக்கள் (ஆலளவiஉளைஅ) ஸ்தாபன அமைப்பிலும் ஈடுபட்டன. ‘தரீக்கா’ எனும் பதத்தின் பொருள் பாதை என்பதாகும். எனினும், நாளடைவில் உளப்பக்குவத்தை ஏற்படுத்தி ஆன்மீக எழுச்சி ஒன்றிற்கு வழிகோலும் பயிற்சி ஒன்றைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம் உம்மத்தின் ஆன்மீகத்துறை மேம்பாட்டில் ஆர்வம் காட்டிய சூபித்துவத் தரீக்காக்கள், இலங்கைவாழ் முஸ்லிம்களிடையேயும் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டன. இலங்கையில் காதிரிய்யா, ஷாதுலிய்யா, நக்ஷபந்திய்யா, றிபாஇய்யா, ஷிஸ்திய்யா போன்ற தரீக்காக்கள் உள்ளன. இவற்றுள் ஷாதுலிய்யாத் தரீக்காவின் மூலம் இலங்கை முஸ்லிம்களிடையே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களிடையே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள, மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆத்மீக ரீதியான விழிப்புணர்வு முயற்சிகள் பற்றியே இக்கட்டுரையில் ஆராயப்படவிருக்கிறது.