dc.description.abstract |
தமிழர் சமுதாய வரலாற்றில் பல்வேறு மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் பெற்றுக்கொண்ட காலப்பகுதியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமைகின்றது. இலங்கையிலும் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறான மாற்றங்களும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டன. இதற்கு அடிப்படையாக அமைந்தது பிரித்தானியர்களின் வருகையாகும். குறிப்பாக, மட்டக்களப்பில்; பிரித்தானியக் குடியேற்றத்தின் மூலமாக ஆங்கிலமொழி, கிறிஸ்தவப் பண்பாடு என்பன மிகுந்த செல்வாக்கைச் செலுத்தத் தமிழ்மொழியும் இந்துப் பண்பாடும் தாழ்வடையும் நிலை தோன்றியது. இக்காலத்தில் சுதேச உணர்வு கொண்ட இளைஞர்கள் பலர் இந்துப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காக உழைத்தனர். இவர்களுள் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையின் வகிபங்கு குறித்து ஆராய்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும். புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை குறித்து பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ள போதிலும், இந்துப் பண்பாட்டு மறுமலர்ச்சியில் அவரது பங்களிப்புக் குறித்து இதுவரை எவ்வித ஆய்வுகளும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விபரண ஆய்வுமுறை, வரலாற்று ஆய்வுமுறை ஆகிய முறையியல்கள் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்துக் கோயில்களில் புலவர்மணியினால் மேற்கொள்ளப்பட்ட மறுமலர்ச்சிச் செயற்பாடுகள் இவ்வாய்வினால் வெளிக்கொண்டுவரப்படுகின்றது. மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அவருடைய பங்களிப்புக்கள் விரிவாக ஆராயப்படுகின்றது. மேலும், சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமரச நிலையை ஏற்படுத்துவதில் புலவர்மணி மேற்கொண்ட நடவடிக்கைகள், சொற்பொழிவுகள் வாயிலாக இந்துசமயக் கருத்துக்களைப் பரப்பியமை முதலியனவும் இவ்வாய்வில் கவனத்திற் கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வின் மூலம் மட்டக்களப்பின் இந்துப் பண்பாட்டு மறுமலர்ச்சியில் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையின் பங்களிப்புக்கள் வெளிவருவதுடன், இலங்கையின் இந்துப் பண்பாட்டு மறுமலர்ச்சி பற்றிய அறிவும் விரிவாக்கம் பெறும். இவ்வாய்வானது மட்டக்களப்பின் இந்துப்பண்பாட்டு மறுமலர்ச்சியில் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையின் வகிபங்கை மாத்திரமே ஆராய்வதாக அமைகின்றது. எதிர்காலத்தில் ஆய்வாளர்கள் ஏனைய சமய ஆளுமைகளின் மறுமலர்ச்சிச் செயற்பாடுகளை ஆராய்வதற்கு இவ்வாய்வு வழிவகுக்குமெனலாம். |
en_US |