Abstract:
ஒரு நிறுவனத்தின் வெற்றியில் தரமான உள்ளீடுகள், வினைத்திறனான செயற்பாடுகள் காணப்படும் போதே வெளியீடுகள் தரமானதாக காணப்படும். பாடசாலை மட்டத்தில் தரமான வளங்கள் உள்ளீடு செய்யப்படுதல் குறைவாகக் காணப்படுகின்றது. ஏனெனில் பாடசாலையில் வளப்பற்றாக்குறை நிலவுவதோடு வளங்கள் உரிய அதிகாரிகளினால் பாடசாலைகளுக்கு முறையாக பங்கிடப்படாமலும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்களினுடைய அடைவுமட்டமானது வீழ்ச்சி அடைகின்றது. அந்தவகையில் ஆய்வுக்காக தெரிவு செய்த பிரதேசத்தில் வளப்பற்றாக்குறை நிலவுவதோடு மாணவர்களின் அடைவுமட்டமும் வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைவிற்கும் மாணவர்களின் அடைவுமட்டத்திற்கும் இடையிலான தொடர்பினை கண்டறிதல் எனும் பொதுநோக்கில் இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் 21 பாடசாலைகள் காணப்படுகின்றன. அதிகஷ்ட பிரதேச பாடசாலைகள் மூன்றும் கஷ்ட பிரதேச பாடசாலைகள் ஏழும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதிபர்கள் எவ்வித மாதிரி தெரிவுமின்றி நேரடியாகப் 10 பாடசாலையின் 10 அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் (3:1) விகிதத்தில் இலகு எழுமாற்று மாதிரி அடிப்படையில் 98 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சிரேஷ்ட இடைநிலை மாணவர்கள் ஒரு பாடசாலையிலிருந்து 10 பேர் என்ற அடிப்படையில் 100 மாணவர்கள் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாக ஆசிரியர் வளப்பற்றாக்குறை அத்தோடு பௌதீக வளப்பற்றாக்குறை நிலவுவதோடு இவை மாணவர்களின் பாவனைக்கு உட்படும் வகையில் காணப்படாத நிலையும் இனங்காணப்பட்டுள்ளது. இத்தகைய வளப்பற்றாக்குறை ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களாக வளத் தேவைகள் சரியான முறையில் இனங்காணப்படாமை, மாகாணசபைகள் முறையாக செயற்படாமை, கல்வி அதிகாரிகளின் அசமத்துவப் போக்கு என்பனவாகும். மாணவர்களின் அடைவுமட்டமானது குறைவடைந்து செல்கின்றது என்பதை அதிபர் பகுப்பாய்விற்கு உட்படுத்தி அதனை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்து தேர்ச்சி பெற்ற ஆசிரியர் வளங்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வித்திணைக்களங்கள் வினைத்திறனாக செயற்படுவதன் ஊடாக வளங்களை முறையாக பங்கிடுவதன் மூலம் மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க முடியும் போன்ற விதந்துரைப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.