Abstract:
நாடகக்கலை வரலாற்றில் இருந்து அறியப்படும் ஒரு நாடக வடிவமே 'பா' நாடகமாகும். இதனை கவிதை நாடகம் எனவும் அழைப்பர். தமிழ் நாடக வரலாற்றில் அரிதாகவே இவை எழுதப்பட்டுள்ளன கதிர்காமர் கனகசபை மற்றும் பாரதிதாசனுக்குப் பினனர்; மகாகவி (உருத்திரமூர்த்தி) மற்றும் முருகையனும் இவர்களுக்குப் பினனர்; கவிஞர் நீலாவணன் ஆகியோரும் கவிதை நாடகங்களை எழுதியுள்ளனர். இந்ந வகையில் நீலாவணனின் 'பா' நாடக எழுத்துருவையும், நிகழ்த்துகையினையும் அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கவிஞர் நீலாவணன் என்றதும் 'நவீன கவிதையின் ஓர் ஆளுமை' என்ற மனப் பதிவே காணப்படுகின்றது. ஆனால், இவர் நாடகத்துறையிலும் ஈடுபாடு கொண்டு பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்து அளிக்கை செய்தவர். இவர் 'பா' நாடகம் என்ற வகையில் நின்று நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்திருக்கின்ற போதும், இவரது இத்தகைய முயற்சி முழுமையாக ஆராயப்படவில்லை. இந்த ஆய்வின்மூலம் இவரது நாடகங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன.
நீலாவணனால் எழுதப்பட்ட கவிதை நாடகங்கள் அனைத்தும் போட்டிக்காகவும், விழாக்களுக்காகவும் அளிக்கை செய்யப்பட்டவை. இவை மாணவர்களையும், பிரபல கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு, நெறியாள்கை செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டவை.