Abstract:
அறபு மொழியிலேயே அல்குர்ஆன் அருளப்பட்டு அதனூடாக நபிகள் நாயகத்தின் போதனைகள் நிகழ்த்தப்பட்டது என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் மத்தியில் இம்மொழிக்கு ஆன்மீக, லௌகீக ரீதியிலான பலமான உறவு இருந்துவரும் அதேவேளை, ஏனைய சமூக மக்களிடமும் இலக்கிய மொழி, சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழி என்ற வகையிலும் அறபு மொழி மகத்துவமிக்க மொழியாக கருதப்படுகிறது. உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அதிகார மாற்றங்களால் அறபுமொழி திட்டமிடப்பட்ட பல தேக்க நிலைகளைச் சந்தித்தது. அதன் விளைவுகளும் தாக்கங்களும் இன்னும் எதிரொலித்தாலும் அச்சவால்களை முறியடித்து, இன்றைய நவீன யுகத்தில் அறபு மொழியானது அரசியல், பொருளாதார, வர்த்தக துறைகளில் மேம்பட்டு விளங்குவதோடு, தேசிய மற்றும் சர்வதேச இராஜதந்திர கேந்திர முக்கியத்துவமிக்க அம்சங்களான சமாதானம், சகவாழ்வு மற்றும் பாதுகாப்பு போன்ற சர்வதேச உறவுகள் தொடர்பான அனைத்து துறைகளிலும் இன்றியமையாத ஒரு ஊடகமாக திகழ்கிறது. அறபு மொழி காலனித்துவ ஏகாதிபத்திய அதிகாரத்தால் மிகவும் நசுக்கப்பட்டு, அறேபிய தேசத்து மக்களுக்கே அது தாய்மொழி என்ற இயல்பான அந்தஸ்தையும் இல்லாதொழிக்க, அதனை அறிவியல் அரங்கை விட்டும் புறந்தள்ளப்பட்ட போதிலும், இம்மொழி மீண்டும் புத்தெழுச்சி பெற்று, உலக அரங்கில் அதிகமானோரால் பேசப்படும் முதன்மையான மொழிகளில் ஒன்றாக எவ்வாறு முன்னேறியது என்ற நியாயமான வினா எழுவது இயல்பானதாகும். இவ்வினாவுக்கு வரலாற்று ரீதியான நிகழ்வுகளை மேற்கோள் காட்டுவதுடன், பல்வேறு சவால்களையும் சதிகளையும் முறியடித்து இம்மொழி வீறுநடைபோடுவதற்கு புராதன மற்றும் நவீன அறிஞர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை வரலாற்று ரீதியான திறனாய்வின் மூலம் இவ்வாய்வு விடைகான விளைகிறது. இதற்கான தரவுகள் துறைசார் அறிஞர்களின் நூற்களிலிருந்து பெறப்பட்டு, பகுப்பாய்வினூடாக தரம்பிரிக்கப்பட்டு வரலாற்று ரீதியான தகவல்களை ஆதாரபூர்வமாக முன்வைப்பதற்கு துணைபுரிகின்றன. வியக்கத்தக்க பல சவால்களுக்கும் தாக்கங்களுக்கும் முகங்கொடுத்த அறபு மொழி வீறுகொண்டு நடைபயில்வதை வரலாற்று கண்ணோட்டத்தில் இக்கட்டுரை விவாதிக்கிறது. இதன் உசாத்துணைகள் யாவும் அறபு மொழி ஆக்கங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.