Abstract:
இன்றைய நிலையில் வேலை- வாழ்க்கை சமநிலையானது வேலை செய்வோர் மற்றும் தொழில் தேடுவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வேலை-வாழ்க்கை சமநிலை என்பது தொழிலாளர் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் வளர்ச்சியடைந்து வருகின்ற எண்ணக்கருவாகும்.
சமகால சமூகத்தில் வேலை-வாழ்க்கை சமநிலையின்மை காரணமாக தொழிலாளர்கள்
மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஊழியர்களின் வேலையாற்றல், திறன் போன்றன. இவ்வேலை-வாழ்க்கை சமநிலையின்மையால் குறைவடைகின்றன. இதன் காரணமாக தனிநபர்களின் மனஅழுத்தம் அதிகரித்து தொழில் வெளியீடானது குறைந்த நிலையை நோக்கி நகர்கின்றது. இவ்வாய்வானது மட்டக்களப்பு மாவட்ட அரச பாடசாலை ஆசிரியர்களின் வேலை-
வாழ்க்கை சமநிலையில் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணிகளின் மட்டம் தொடர்பானதாகும். அத்துடன் இச்செல்வாக்கினை நகர, கிராம மட்டங்களுக்கிடையில் ஓர் ஒப்பீடும் செய்யப்படுகின்றது.
இங்கு வேலை-வாழ்க்கை சமநிலையில் செல்வாக்குச் செலுத்தும் தனிப்பட்ட காரணி மற்றும் நிறுவனக் காரணியினை இரு மாறியாகக் கொண்டு ஆய்வு செய்யப்படுகின்றது. மேலும், ஒவ்வொரு மாறிக்கும் நான்கு பரிமாணங்களும், ஒவ்வொரு பரிமாணத்திற்கும் நான்கு குறிகாட்டிகளும் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற கல்வி வலயங்களில் மட்டக்களப்பு வலயம் மற்றும் மண்முனை மேற்கு வலயங்களில் பணிபுரிகின்ற ஆசிரியர்களிடமிருந்து ஆய்விற்கான தரவுகள் திரட்டப்பட்டன. இதற்கென வடிவமைக்கப்பட்ட வினாக் கொத்தினைப் பயன்படுத்தி ஒவ்வொரு வலயத்திலிருந்தும் தலா 150 ஆசிரியர்கள் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டனர். திரட்டப்பட்ட தரவுகளானது SPSS (19.0) மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு தகவல்கள் அட்டவணைகளினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வானது மட்டக்களப்பு மாவட்ட அரச பாடசாலை ஆசிரியர்களின் வேலை- வாழ்க்கை சமநிலையில் தனிப்பட்ட, நிறுவனக் காரணிகளின் மட்டம் உயர்வாகக் காணப்படுகின்றது எனவும் தனிப்பட்ட காரணிகளினை விட நிறுவனக் காரணிகளின் செல்வாக்கு கூடுதலாகக் காணப்படுகின்றது என்கின்ற முடிவிற்கும் வரப்பட்டது. அத்துடன் நகரப் புறத்தினை விட கிராமப் புறத்தில் வேலை வாழ்க்கை சமநிலை மட்டம் சற்று உயர்வாகவே காணப்படுவதை அவதானிக்க முடியும்