Abstract:
"மெல்லக் கற்கும் மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் தலைப்பில் அமையப்பெறும் இவ்வாய்வானது கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கனிஷ்ட இடைநிலை பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இப்பிரதேசப் பாடசாலைகளிலே மெல்லக் கற்கும் மாணவர்கள் பெறுகின்ற அடைவானது மிகவும் தாழ்நிலையில் காணப்படுகின்றது. இம்மாணவர்களின் அடைவினை அதிகரிப்பதில் ஆசிரியர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இம்மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் அடிப்படையிலேயே "மெல்லக் கற்கும் மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் ஆய்வு நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்விற்காக ஆய்வு மாதிரிகளாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்கென தெரிவு செய்யப்பட்ட 06 பாடசாலைகள் நோக்க மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் எளிய எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையிலும், மாணவர்கள் படிமுறை எழுமாற்று மாதிரித் தெரிவு அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டனர்.ஆய்விற்கான தரவுசேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல், ஆவணங்கள் ஆகியன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. பகுப்பாய்வு மூலம் பல்வேறு முடிவுகளைக் கண்டறிய முடிகின்றது. கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்திலே மெல்லக்கற்கும் மாணவர்களின் அடைவினை உயர்த்துவதில் குடும்பம், பாடசாலை, மாணவர் எனப் பல்வேறுபட்ட காரணிகளின் தாக்கமானது பாடசாலைகளின் கற்றல் அடைவிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது எனக் கண்டறியப்பட்டு மேலும் அடைவுமட்டத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல சவால்கள் இனங்காணப்பட்டு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் இடம்பெறுவதோடு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான ஆலோசனைகளாக மெல்லக் கற்கும் மாணவர்களின் அடைவுத் திறனை மேம்பாடு, பாடசாலையும் சமூகமும் தேவை. மாணவர்களின் மென், வன் திறன்களின் மேம்பாடு எதிர்காலத்திற்கான நற்பிரசைகளை உருவாக்கம், கற்றலுக்கான பௌதீக வளமுகாமைத்துவம் முதலான விடயங்களை மையப்படுத்தியதாக ஆய்வாளனால் முன்வைக்கப்படுகின்றன