Abstract:
கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற முதுகல்விமாணிக் கற்கைநெறியின் ஓர் பகுதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தொழில்நுட்பக் கல்லூரிகளில் முழுநேரக் கற்கைகெறிகளைப் பூர்த்திசெய்து வெளியேறும் மாணவர்களின் தொழில்வாய்ப்பு நிலை தொடர்பில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வானது அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியினைப் பெற்று வெளியேறிய முழுநேர மாணவர்களின் தொழில்வாய்ப்பு நிலையைக் கண்டறிந்து கொள்வதற்காகவும், அவற்றை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு சுட்டிக்காட்டி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வானது ஐந்து அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளதுடன், அத்தியாயம் ஒன்றில் அறிமுகமும். அத்தியாயம் இரண்டில் இலக்கிய மீளாய்வும், அத்தியாயம் மூன்றில் ஆய்வு முறையியலும், அத்தியாயம் நான்கில் தரவுகளை முன்வைத்தலும் பகுப்பாய்வும், அத்தியாயம் ஐந்தில் கண்டறிதலும், பரிந்துரைகளும் அடங்கலாக மேலும் உசாத்துணைகளும், பின்னிணைப்புக்களும் என ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரிகளில் திருப்திகரமாக முழுநேரப் பயிற்சிநெறியைப் பூர்த்திசெய்த 1145 பயிலுனர் மாணவர்களில் 10% ஆன 115 பேருக்கு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டும், இரு தொழில்நுட்பக் கல்லூரிகளின் அதிபர்கள், உப அதிபர்கள், விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், ஆலோசனை வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டும், மேலும், குறித்த தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு போன்றவற்றிலிருந்து ஆவணங்கள் மூலம் தரவுகள் பெறப்பட்டு, பெறப்பட்ட தரவுகளும் தகவல்களும் அட்டவணைகள், வரைபுகள் மூலம் அளவுரீதியான பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பண்புரீதியாகப் பெறப்பட்ட தகவல்களும் நூற்றுவீத அடிப்படையில் அளவுரீதியான பகுப்பாய்வாக மேற்கொள்ளப்பட்டது. அளவுரீதியாகவும், பண்புரீதியாகவும் கலப்பு பகுப்பாய்வு முறையில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதியாக, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியினைப் பெற்று வெளியேறிய முழுநேர மாணவர்களின் தொழில்வாய்ப்பு நிலை தொடர்பிலான முடிவுகள் ஆராயப்பட்டுள்ளதுடன், இம் முடிவுகளுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியினை முடித்த மாணவர்கள் தொழில்வாய்ப்பினைப் பெறுவதில் அவர்கள் கற்கும் கற்கைநெறிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன . வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதில் தொழிற்கல்வி கூடிய தாக்கம் செலுத்துகின்றது, தொழிற்கல்வியைப் பெற்று தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள தொழில் வழிகாட்டல் நிலையம் ஏற்பாடு செய்யவில்லை போன்ற விடயங்களை இவ் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டன