Abstract:
கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளப்படுகின்ற களமாகிய பாடசாலைகளில் ஆய்வாளரினால் இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் முதன்மையானதாக காணப்படுவன மாணவர்களின் விஞ்ஞானப்பாட அடைவுகளாகும். இங்கு மாணவர்களின் அடைவுகளில் ஆசிரியர்களின் வாண்மைத்துவமிக்க கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் கூடுதலான அளவில் தாக்கம் செலுத்துகின்றது. அந்தவகையில் "களிஸ்ட இடைநிலைப்பிரிவில் விஞ்ஞானப்பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அப்பிரிவு மாணவர்களின் விஞ்ஞான பாட அடைவில் ஏற்படுத்தும் தாக்கம்" என்ற தலைப்பில் அளவைநிலை ஆய்வாக இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்தில் காணப்படும் 33 பாடசாலைகளுள் கனிஸ்ட இடைநிலை வகுப்புகளைக் கொண்ட IAB பாடசாலை 01, IC பாடசாலைகள் 05, பாடசாலை வகை 11 05 உம் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. இப்பாடசாலைகளிலிருந்து 11 அதிபர்களும், விஞ்ஞானப் பாடத்தைக் கற்பிக்கும் 21 ஆசிரியர்களும் 120 மாணவர்களும் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். வினாக் கொத்தின் மூலம் இம்மாதிரிகளிடமும் பரீட்சைப் பெறுபேற்று ஆவணங்களில் இருந்தும் தரவுகள் பெறப்பட்டு அவை வகுப்பாக்கம், அட்டவணையாக்கம், சலாகை வரைபு என்பவற்றினூடாக பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. மாணவர்களின் விஞ்ஞானப் பாட அடைவை மேம்படுத்துவதற்கு விஞ்ஞானப் பாடத்துறைசார் ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தலுடன் செயற்பாடுகள்சார் கற்றல் கற்பித்தலும் முக்கியமானதாகும். அந்தவகையில் புதிதாக நியமனம் பெறும் விஞ்ஞானப் பாடத்துறைசார் ஆசிரியர்களிற்கு சேவைக்காலப் பயிற்சிகள், செயன்முறைசார் வேலைத்திட்டங்களை கிரமமாக நடைமுறைப்படுத்துவதோடு தரவட்டச் செயற்பாடுகளையும் ஆசிரியர் வாண்மை விருத்திச் செயற்பாடுகளையும் வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டும். மேலும் வினைத்திறனான வெளியக உள்ளக. மேற்பார்வையின் மூலம் விஞ்ஞானப்பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களிற்கு தேவைப்படும் பயிற்சிகள். அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பாடப்பரப்புகள், இனங்காணப்பட்டு உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். இவற்றின் மூலம் ஆசிரியர்களின் விஞ்ஞானப் பாடக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை விருத்திசெய்ய முடிவதுடன் விஞ்ஞானப் பாட அடைவையும் மேம்படுத்தலாம். அத்தோடு விஞ்ஞானப் பாடம்சாரா நியமனம் பெற்ற ஆசிரியர்களிற்கு மேற்கூறப்பட்டவாறான போதிய விஞ்ஞானப்பாட விடயம் சார் பயிற்சிகளை வழங்குவதன் மூலமும் தகைமைகளிற்கு ஏற்ப மீள்நியமனம் வழங்குவதன் மூலமும் அவர்களின் விஞ்ஞானப் பாடம் கற்பித்தலில் ஆர்வத்தை ஏற்படுத்துவதனூடாக விஞ்ஞானப் பாட அடைவினை மேம்படுத்தலாம்.