Abstract:
கணினி மற்றும் திறன் பேசியின் முறையற்ற பாவனை க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தில் ஏற்படுத்தும் செல்வாக்கு (கோறளைப்பற்று கோட்ட க.பொ.த (உ/த) பிரிவுகளைக் அடிப்படையாகக் கொண்ட பாடசாலைகளைப் பற்றிய ஆய்வு) எனும் தலைப்பில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணினி மற்றும் திறன்பேசி சாதனங்களின் பாவனை மாணவர்களின் கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதா? என்பதனை கண்டறியும் பொருட்டு கணினி மற்றும் திறன்பேசி பாவனை தொடர்பில் மாணவர்கள் கொண்டுள்ள ஈடுபாடு, அதிகமாக பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள், அதனால் மாணவர்களின் கற்றல் மற்றும் நடத்தையில் ஏற்படும் தாக்கங்கள், பாவனையை குறைத்துக் கொள்வதற்கான தீர்வாலோசனைகள் என்பனவற்றை அறியும் முகமாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைப்புக்கு பொருத்தமான வகையில் இலக்கிய மீளாய்வும் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தின் கோறனைப்பற்று கோட்டத்தில் உள்ள ஐந்து உயர்தர பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வாய்வுக்கான ஆய்வு மாதிரிகளாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள், பெற்றோர்கள், தெரிவு செய்யப்பட்டனர். இதன் பிரகாரம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இலகு எழுமாற்று மாதிரியிலும், அதிபர்கள் நோக்கம் மாதிரி அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆய்வுக்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினா கொத்து, நேர்காணல் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பெறப்பட்ட அளவு சார்ந்த தரவுகள் Excel மூலமாகவும் பணிபுசார் தரவுகள் வியாக்கியானம் மூலமாகவும் பெறுபேறுகளும், முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் பெறப்பட்ட முடிவுகளில் அடிப்படையில் அதிகமான மாணவர்கள் தனிப்பட்ட பாவனைக்காக இச்சாதனங்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்கள் கற்றலுக்காகவன்றி சமூக வலைத்தளங்களை பார்வையிடுவதற்காகவே கணினி மற்றும் திறன்பேசியை பயன்படுத்துகின்றார்கள். பெற்றோர்கள் தங்களுடைய சுய கௌரவத்திற்காகவன்றி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை கவனத்தில் கொண்டு இவற்றை தனிப்பட்ட பாவனைக்காக வாங்கி கொடுப்பதை தவிர்க்கலாம் அத்துடன் முகப்புத்தகம் சமூக வலைத்தளங்கள் என்பன தொடர்பிலும் சரியான வகையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் முறையான வழிகாட்டல்களையும் மேற்கொள்ளலாம்.. இவ்வாறான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் கணினி மற்றும் திறன்பேசி சாதனங்களின் பாவனை மாணவர்களின் கற்றல் மற்றும் நடத்தையில் சாதகமான மாற்றங்களை விட பாதகமான மாற்றங்களையே அதிகம் ஏற்படுத்தி உள்ளது என முடிவு பெறப்பட்டுள்ளது