Abstract:
க.பொ.த. உயர்தர பதின்மூன்று ஆண்டு உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்ட அமுலாக்கலில் காணப்படும் பிரச்சினைகளும் மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் பாதிப்பும் எனும் தலைப்பிலான ஆய்வில் சாரா மாறியாக உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி பதின்மூன்று ஆண்டு நிகழ்ச்சித் திட்ட அமுலாக்கலில் காணப்படும் பிரச்சினைகளும், சாரும் மாறியாக மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் பாதிப்பும் காணப்படுகிறது. இங்கு நிகழ்சித்திட்ட அமுலாக்க பிரச்சினை காரணமாக பாடக்கற்பித்தலை சரியாக மேற்கொள்ளாமையினால் மாணவர்களின் அடைவுகள் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே இந்நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளையும் அதனால் மாணவர்களின் கற்றலில் ஏற்படும் பாதிப்புக்களையும் அதனைக் குறைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இவ்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கல்முனை. சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள 13 ஆண்டு உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம் உள்ள ஐந்து IAB பாடசாலை, 1C பாடசாலைகளையும் தெரிவு செய்து, ஆய்வுக் குடித்தொகை சிறிய அளவில் காணப்படுவதனால் ஆய்வுக் குடித்தொகையில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆய்வின் மாதிரியாக கொள்ளப்பட்டுள்ளது. அதாவது 40 ஆசிரியர்கள், 158 மாணவர்கள். 5 அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களிடம் இருந்து வினாக்கொத்து மூலமும், அதிபர்களிடம் இருந்து நேர்முகம் காணல் மூலமாகவும் பல்வேறு தரவுகள், தகவல்கள் பெறப்பட்டு பண்புசார் முறையிலும், அளவு சார் முறையிலும் பகுப்பாய்வு செய்யப்பட்டமையினால் இது ஒரு கலப்பு முறை ஆய்வாகும். அவை அட்டவணைகள் மூலமாகவும், வட்ட வரைபு மூலமாகவும் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவிலிருந்து மாணவர்களின் வரவு குறைவு. மாணவர்களின் க.பொ.த.சா. தர அடிப்படை அறிவு குறைவு, பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை, இந்நிகழ்சித் திட்ட மாணவர்கள், பெற்றோர்களின் எதிரான மனப்பாங்கு, இந்நிகழ்சித் திட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் இடைவினை குறைவாக இருத்தல், மாணவர்களுக்கு தொழிற் பாடம், பொதுப்பாடங்களைக் கற்பிப்பதற்கான போதியளவு சேவைக் காலப் பயிற்சிகள் ஆசிரியர்களுக்குக் குறைவு ஆகியன முக்கிய பிரச்சினைகளாகும். மேலும் பெற்றோர், மாணவர்களுக்குப் பொருத்தமான ஆலோசனை வழிகாட்டல் நிகழ்சித் திட்டங்களை நடாத்துதல், ஆசிரியர்கள் நவீன கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தல், கூடியளவு கவர்ச்சியான வகுப்பறை வசதிகள் உருவாக்கப்படல், பெற்றோர்கள் பாடசாலைக்கு தினந்தோறும் பிள்ளைகளை அனுப்புதல், பெற்றோர்கள் முழு ஆதரவையும் இத்துறைக்கு வழங்குதல் ஆகியன மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளாகக் கண்டறியப்பட்டது