Abstract:
பாடசாலைகளின் அடைவுமட்டமானது அதனை சூழவுள்ள சமூகம் எதிர்பார்க்கும் மட்டத்தினை அடையவில்லை. பாடசாலைகளின் நிலைகளை அறிவதற்காகவும், அதனை வழிப்படுத்துவதற்காகவும் கல்வி அமைச்சினால் வலயக்கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வலயமட்டத்தில் மேற்பார்வை திட்டங்கள் முன்மொழியப்பட்டு வலயமட்ட மேற்பார்வை மேற்கொள்ளப்படுகிறது. பாடசாலை அடைவுமட்டத்தை அதிகரிப்பதில் இவ் வலயமட்ட மேற்பார்வையின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்காகவும். பாடசாலை மட்ட அடைவுமட்டத்தில் தாக்கம் செலுத்தும் வலயமட்ட மேற்பார்வை காரணிகளை இனங்காணுதல், பாடசாலை அடைவுமட்டத்தை அதிகரிப்பதற்காக வலயமட்ட மேற்பார்வையில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்தல் எனும் நோக்கில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கிழக்கிலங்கையின் அம்பாரைமாவட்டத்தில் உள்ள கல்முனைக் கல்வி வலயத்தில் உள்ள 65 பாடசாலைகளில் (IAB, IC, Type II, Type III) தெரிவு செய்யப்பட்ட IAB, IC பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் IAB, IC பாடசாலைகள் அனைத்திலும் (21 பாடசாலைகள்) காணப்படும் ஆசிரியர்களில் 10% (135 ) ஆசிரியர்கள் மற்றும் 25 வலய மேற்பார்வையாளர்கள் படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி, ஒழுங்கமைக்கப்பட்ட எழுமாற்று மாதிரிகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டு அவர்களிடம் வினாக்கொத்துகள் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு அட்டவணையாக்கம், நேர்கோட்டு வரைபுகள், சலாகை வரைபுகள், சிதறல் வரைபுகள் போன்றவை புள்ளிவிபரமாக்கப்பட்டு அவை MSWord மற்றும் MS Excel ஆகிய மென்பொருட்களின் துணைகொண்டு பகுப்பாய்வுகள் செய்யப்பட்டு வியாக்கியானமும், கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ் ஆய்விலே பெறப்பட்ட முக்கிய முடிபுகளாக பின்வருபவை காணப்படுகிறது.வலயமட்ட மேற்பார்வை செயற்றிறனாக மேற்கொள்ளப்படவில்லை என்பதும். மேற்பார்வையாளர்களில் குறித்த பிரிவினர் உயர்கல்வி கொண்டிருக்கவில்லை என்பதுடன் மேற்பார்வையாளர்களுக்குரிய தகைமையை பண்பினை கொண்டிருக்கவில்லை என்பதும், ஆசிரியர்களும், மேற்பார்வையாளர்களும் பாடசாலை அடைவுமட்டத்தை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டிருக்கவில்லை என்பதும், இதனால் ஆய்வு பிரதேசத்தில் பாடசாலை அடைவுமட்டத்தில் வலயமட்ட மற்பார்வையின் பங்களிப்பு குறைவாக இருப்பதும் முடிபுகளாக பெறப்பட்டன.