Abstract:
மாணவர்களின் சுயகற்றல் விருத்திக்கு பாடசாலை நூலகச் செயற்பாடுகள் சிறந்த வழிகாட்டல்களை வழங்குகின்றன. எனினும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் பாடசாலை நூலகங்கள் மாணவர்களின் சுயகற்றலை விருத்தி செய்வதற்குரிய போதுமான செயற்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிவாரி மதிப்பீடுகளின் போது இனங்காண முடிந்தது. எனவே, சிரேஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் சுயகற்றல் விருத்தியில் பாடசாலை நூலகச் செயற்படுகளின் முக்கியத்துவத்தையும், அதை முன்னெடுப்பதில் பாடசாலை நூலகங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கண்டறிந்து, முன்னேற்றுவதற்கான ஆலோசனைகளை சிபாரிசு செய்தல் என்னும் பொதுநோக்கத்திற்கமைய வடிவமைக்கப்பட்ட இவ்வாய்வு ஓர் அளவை நிலை ஆய்வாகும். ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் பாடசாலை நூலகம் அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி எடுத்தல் முறையிலும் நூலகப்பொறுப்பாளர்கள், நூலகப் பாடவேளை ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர் நோக்க மாதிரி அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து, நேர்காணல் ஆவணங்கள் ஆகிய ஆய்வுக்கருவிகளை பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வின் விசேட நோக்கங்களுக்கேற்ப அளவுரீதியாகவும் பண்புரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. ஆய்வின் முடிவுகளாக, மாணவர்களின் சுயகற்றலை விருத்தி செய்வதற்கு பாடசாலை நூலகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கற்றல் வளநிலையம் என்பதை மிக அதிகமான மாணவர்கள்(93.40%) ஏற்றுள்ளனர். பாடசாலை நூலகங்களால் மாணவர்களின் சுயகற்றல் விருத்திக்காக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை போதுமானதாக அமையவில்லை என்று பாடசாலை நூலகச் செயற்பாடுகளுக்குரிய மாணவர்களின் புள்ளிகளது இடை (68.13%) மூலம் கண்டறியப்பட்டது. பாடசாலை நூலகத்தை செயற்படுத்துவதற்கு தேவையான பயிற்சி பெற்ற ஆளணியினரின்மை, தளபாட நெருக்கடி, நூல்கள், மற்றும் இணையவசதிகளில் காணப்படும் பற்றாக்குறை போன்றன மாணவர்களின் சுயகற்றலை விருத்தி செய்வதில் பாடசாலை நூலகங்கள் எதிர்கொள்ளும் பிரதான சவால்களாகும். மாணவர்களின் சுயகற்றல் விருத்திக்கும் பாடசாலை நூலகச் செயற்பாடுகளுக்கும் இடையில் நேர்த்தொடர்பு உண்டு. இதனை இவ்விரு இணைபுக்குணகம்(0.58) விடயங்களிற்குமான மாணவர்களின் துலங்கள்களின் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது. பாடசாலை நூலகச் செயற்பாடுகளை வினைத்திறனாக ஒழுங்கமைக்கும் போது மாணவர்களின் சுயகற்றலை விருத்தி என்பதை செய்யலாம் பங்கெடுத்த ஆய்வில் அதிகளவானோர் அங்கீகரித்துள்ளதனால் அதற்கேற்ற வகையில் எதிர்காலத்தில் பாடசாலை நூலகங்களின் செயற்பாடுகள் மாற்றம் பெறுதல் வேண்டும்.