Abstract:
பாடசாலைகளில் காணப்படும் ஆளிடை முரண்பாடுகளை இனங்காண்பதும் அவற்றை முகாமைத்துவம் செய்வதும் அதிபரின் பிரதான வகிபாகமாகும். ஆனால் இம்முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்துக்கொள்வதில் அதிபர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்வாய்வின் பிரதான நோக்கம் பாடசாலைகளில் காணப்படும் ஆளிடை முரண்பாடுகளின் தற்போதைய நிலையை கண்டறிதலும் அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அதிபர்களுக்கு வழங்குவதாகும். இவ்வாய்வானது பதுளை மாவட்டத்தின் பசறை கல்வி வலயத்திலுள்ள தமிழ்மொழிமூலப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை மாதிரித்தெரிவாக கொண்டு வினாக்கொத்து, நேர்காணல் மூலமாக தரவுகள் சேகரிக்கப்பட்டு, எண்சதவீத அளவீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் பாடசாலை ஆளிடை முரண்பாட்டின் தற்போதைய நிலை, ஆளிடை முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்வதில் அதிபர் பயன்படுத்தும் பாணிகள் மற்றும் முரண்பாடுகள் தொடர்பான அதிபரின் நோக்குகள், ஆளிடை முரண்பாடுகள் பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற ஆய்வு நோக்கங்களின் அடிப்படையில் பண்புரீதியாகவும் அளவுரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையிலான முரண்பாடுகள்,ஆசிரியர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், அதிபருக்கும் ஆசிரியருக்குமிடையிலான முரண்பாடுகள் என்பன அதிகமாக காணப்படுகின்றன. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு மாணவர்களின் ஒழுக்க பிரச்சனைகள், கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் என்பனவும் அதிபருக்கும் ஆசிரியர்களுக்குமிடையிலான முரண்பாடுகளுகளில் ஆசிரியர்களின் விடுமுறை, பாடக்குறிப்பு தயாரிக்காமை. மாணவரின் அடைவுமட்டம் என்பன காரணமாக அமைகின்றன. முரண்பாடுகள் ஏற்படும்போது அதிபர்கள் விட்டுக்கொடுத்தல் பாணியையும் தவிர்த்தல் பாணியையும் அதிகமாக கையாள்வதுடன் முரண்பாடுகள் தொடர்பாக மரபுவாதிகளின் நோக்கையே அதிகமாக கொண்டுள்ளனர். முரண்பாடுகள் ஏற்படும்போது அதிபர்கள் முரண்பாட்டு முகாமைத்துவம் தொடர்பான அறிவையும் அனுபவத்தையும் கையாண்டு பிரச்சனை தீர்க்கின்றனர். ஆளணி முரண்பாடுகளானது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இயங்காநிலையை அதிகம் ஏற்படுத்துகின்றன.
ஆய்வாளன்