dc.description.abstract |
"பதுளை மாவட்டத்தின் டவுன்சைட் தோட்டப் பகுதியின் தேயிலைப் பயிர்ச்செய்கை சார்ந்த பிரச்சினைகள்" எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வானது, பதுளை மாவட்டத்தின் டவுன்சைட் தோட்டப்பகுதியில் தேயிலை உற்பத்தியின் நிலைமையையும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அறிதல் என்பதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வுக்கு தேவையான தரவுகள் நேர்காணல், கலந்துரையாடல், நேரடி அவதானம் மற்றும் வினாக்கொத்து ஆகிய முதலாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளின் மூலமும், இரண்டாம் நிலைத்தரவு மூலங்களில் இருந்தும் பெறப்பட்டன. குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களில் 13% அடிப்படையில் 100 வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவு சேகரிக்கப்பட்டுள்ளது. வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட தரவுகள் SPSS மென்பொருள் மூலம் மீடிறன் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பெறுபேறுகள் விபரிக்கப்பட்டுள்ளன. துணை நிலை தரவுகள் Excel மென்பொருள் மூலமான இணைவுகுணக பகுப்பாய்வு நுட்பத்தினை பயன்படுத்தி சார்ந்த மற்றும் சாரா மாறிகளுக்கிடையிலான தொடர்புத்தன்மை அறியப்பட்டுள்ளது. இதன்படி தேயிலை உற்பத்திக்கும், உற்பத்தி செலவிற்கும் இடையில் பலமான எதிர் தொடர்பும், தேயிலை உற்பத்திக்கும், தேயிலை நிலங்களின் அளவிற்கும் இடையில் பலமான நேர் தொடர்பும், தேயிலை உற்பத்திக்கும், தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் பலமான நேர் தொடர்பும் காணப்படுவதனை ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆய்வுப்பிரதேசத்தில் உற்பத்தி செலவு குறைவாகக் காணப்பட்ட வருடங்களில் தேயிலை உற்பத்தி அதிகமாகவும், தேயிலை நிலமும், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்பட்ட வருடங்களில் தேயிலை உற்பத்தியும் குறைவாகவும் காணப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டில் 312.26 ha (25.32%) ஆகக் காணப்பட்ட நிலம் 2022 இல் 240.77 ha (19.52%) என்ற அளவில் குறைவடைந்துள்ளது. அத்துடன் தேயிலை உற்பத்திக்கும் காலநிலைக் கூறுகளுக்கிடையிலான தொடர்புத் தன்மையும் இணைவுக்குணக நுட்ப முறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் வெப்பநிலை, மழைவீழ்ச்சி, அமுக்கம் ஆகிய கூறுகளின் அளவு மிக அதிகமாக காணப்படும் காலங்களில் உற்பத்தி குறைவடைந்துள்ளமையையும், ஈரப்பதன் அதிகமாகக் காணப்பட்ட காலங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் உற்பத்தியில் எதிர்கொள்ளப்படும் பல சவால்களினால் தேயிலை உற்பத்தி கடந்த இரு தசாப்த காலமாக வீழ்ச்சியடைந்து வந்துள்ளமை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவ்வாறான சவால்களை தீர்த்துக் கொள்வதற்கான பரிந்துரைகளும் ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது |
en_US |