Abstract:
நிலப்பயன்பாடு என்பது நில மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் மனிதனது செயற்பாடுகளையும், நிலப் போர்வைகளையும் குறிக்கின்றது. அந்தவகையில் மெத்தும்பர பிரதேச செயலகப் பிரிவின் காலரீதியான நிலப்பயன்பாட்டு மாற்றம் (2002 2022)" எனும் இவ்வாய்வானது இரு ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதிகளில் நிலப்பயன்பாட்டில் ஏற்பட்ட கால ரீதியான மாற்றத்தை புவியியல் தகவல் முறைக்கூடாக கண்டறிவதை நோக்கமாகக் கொண்டது. அந்தவகையில் குறிப்பிடப்பட்ட ஆய்வின் பொருட்டு முதலாம் நிலைத் தரவாக நேரடி அவதானிப்பு முறையும், இரண்டாம் நிலைத் தரவாக 2002 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான Landsat 7. Landsat 9 ஆகிய செய்மதிப் படங்கள், மெததும்பர பிரதேச செயலக மூலவளத் திரட்டு (2021), மாவட்ட புள்ளிவிபரவியல் அறிக்கைகள், ஆய்வுகளுடன் தொடர்புடைய நூல்கள், சஞ்சிகைகள் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த நிலப்பயன்பாடு மற்றும் நிலப்பயன்பாட்டு மாற்றம் என்பவற்றினை புவியியல் தகவல் முறைக்கூடாக Arc GIS 10.7.1 மென்பொருளைப் பயன்படுத்திக் கால ரீதியான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு 2002, 2022 ஆம் ஆண்டுகளுக்கான நிலப்பயன்பாட்டுப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Google Earth மூலம் குறித்த ஆய்வுப் பிரதேசத்தின் நிலப்பயன்பாட்டு மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் Supervised Classification முறையைப் பயன்படுத்தி பகுப்பாய்வானது மேற்கொள்ளப்பட்டது. படங்களின் தரம் மற்றும் நுல்லியத்தன்மை என்பவற்றை வெளிப்படுத்த உண்மை மதிப்பீடானது Change Error Matrix முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி தேயிலை நிலங்கள் 6 சதவீதமாகவும், காடுகள் 4 சதவீதமாகவும் குறைவடைந்துள்ளதுடன் கட்டமைக்கப்பட்ட பகுதி 10 சதவீதமாகவும், வயல் நிலங்கள் 2 சதவீதமாகவும், நீர்நிலைகள் 1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. இக்காலப்பகுதியிலான நிலப்பயன்பாட்டு மாற்றம் பல்வேறு பௌதீக, சமூக, பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே இயற்கை வளங்களை பாதுகாத்தல், மீள் காடாக்கல், நிலப்பயன்பாட்டு கொள்கைகள் மற்றும் திட்டமிடல்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.