Abstract:
மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர வளம் என்பது மிகப் பெறுமதியான ஒன்றாக காணப்படுகின்றது. அந்தவகையில் கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் கரையோரமானது 40 Km தூரம் பரந்து காணப்படுகின்றது. இவ்வளங்கள் முறையாக அடையாளப்படுத்தி அபிவிருத்திக்குட்படுத்தாத நிலை காணப்படுகின்றது. அதன்படி "வாகரை பிரதேசத்தின் கரையோர வளங்களும் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களும்" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வாய்வானது பிரதேசத்தின் வாகரை கரையோர வளங்களினை அடையாளப்படுத்தி அவற்றின் மூலம் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களைக் கண்டறிதல் எனும் பிரதான நோக்கத்தினடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நேரடி அவதானிப்பு, நேர்காணல், வினாக்கொத்து ஆகிய முதலாம் நிலை தரவுகள் மூலமும் இரண்டாம் நிலை தரவுகள் மூலமும் தரவுகளும் தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. வினாக்கொத்தானது ஆய்வுப் பிரதேசத்தின் குடும்பங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக 2.5 சதவீத அடிப்படையில் எழுமாற்றாக வழங்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள், தகவல்களை அடிப்படையாகக்கொண்டு கலப்பு அணுகுமுறையினூடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. EXCEL மென்பொதியினை பாவித்து தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதுடன் ஆய்வுப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட வளங்களான கண்டல் தாவரங்கள், முருகைக்கற் பாறைகள், கடற்புற்கள், கடற்கரையோரங்கள், மீன்வளங்கள், கற்பாறைகள், கனியமணல் (இல்மனைட்). ஏனைய கரையோரத் தாவரங்கள் போன்றவை ArcGIS 10.3 மென்பொதியினைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் கரையோர உயிர்ச்சூழல் 42 சதவீதம் அழிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. SWOT பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான பலம். பலவீனம், வாய்ப்பு மற்றும் தடை என்பன அறியப்பட்டு அபிவிருத்தியை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படும் கரையோர வளங்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றன என்பது பற்றியும் ஆராயப்பட்டு அவற்றை . இழிவளவாக்குவதற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன