Abstract:
"கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் நிலப்பயன்பாட்டு மாற்றம் (2002 மற்றும் 2022)" எனும் ஆய்வானது சுல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் 2002 மற்றும் 2022 ஆகிய இரு காலகட்டங்களுக்கிடைப்பட்ட நிலப்பயன்பாட்டு மாற்றத்தை நோக்காகக் கொண்டது. அந்தவகையில் குறிப்பிட்ட ஆய்வின் பொருட்டு முதலாம் நிலைத்தரவுகள் நேரடி அவதானிப்பு முறை, கலந்துரையாடல். மூலமாகப் பெறப்பட்டுள்ளன. மேலும் இரண்டாம் நிலைத் தரவுகளாக 2002 மற்றம் 2022 ஆம் ஆண்டுக்கான செய்மதிப்படங்கள், மாவட்ட செயலக புள்ளிவிபரவியல் அறிக்கைகள், வருடாந்த செயலாற்றுகை அறிக்கை கல்நேவ (2002,2022), கல்நேவ பிரதேச செயலக மூலவளத்திரட்டு (2022) மற்றும் முன்னைய ஆய்வுகள், ஆய்வுடன் தொடர்புடைய நுால்கள், சஞ்சிகைகள் ஆகியனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த நிலப்பயன்பாடு மற்றும் நிலப்பயன்பாட்டு மாற்றம் என்பவற்றினை புவியியல் தகவல் தொழில்நுட்பக் கையாள்கையினூடாக ArcGIS 10.4.1 மென்பொருளை பயன்படுத்தி இட ரீதியான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு 2002. 2022ஆம் ஆண்டுக்கான நிலப்பயன்பாட்டு படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இட ரீதியான பகுப்பாய்வினை மேற்கொள்ளுவதற்கு US Geological Survey, Earth Explorer இருந்து 2002 ஆண்டிற்கான செய்மதிப்படமானது Landsat 7 ETM+ C2 L1 இல் இருந்து (landsat07_LITP பதிவிறக்கப்பட்டது) அத்துடன் 2022 ஆண்டிற்கான செய்மதிப்படமானது Landset8 OLI/TIRS C1 Levl-1 இல் இருந்து (LC08_LITP) பதிவிறக்கப்பட்டு அதன் மூலம் குறித்த ஆய்வுப் பிரதேசத்தின் நிலப்பயன்பாட்டு மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வில் பெறப்பட்டுள்ளதுடன் Supervise Classification முறையை பயன்படுத்தி பகுப்பாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. படங்களின் தரம் மற்றும் துல்லியத்தன்மை என்பவற்றை வெளிப்படுத்த உண்மை மதிப்பீடானது Kappa குணக முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் முறைகளின் படி 2002-2022 காலப்பகுதியில் ஆய்வுப் பிரதேசத்தின் காட்டு நிலம் மற்றும் நீர் பரப்புக்களில் அதிகளவான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இவை முறையே 2316.9 ஹெக்டயரும், 1541.52 ஹெக்டயரும் குறைவடைந்துள்ளது. மேலும் கட்டியெழுப்பப்பட்ட நிலங்கள் 3480.57 ஹெக்டயராக அதிகரித்தும் விவசாய நிலங்கள் மற்றும் ஏனைய நிலப்பயன்பாட்டு அம்கங்களும் முறையே 550.13 ஹெக்டயர். 3009.6 ஹெக்டயர் அதிகரித்து வந்துள்ளமையை அவதானிக்கலாம். மேற்படி நிலப்பயன்பாட்டு மாற்றமானது பல்வேறு சூழல், சமூக தாக்கங்களை தோற்றுவித்துள்ளது.