Abstract:
இலங்கையின் கரையோரமானது தற்காலத்தில் பல்வேறுபட்ட மாற்றங்களிற்கு உள்ளாகி வருகின்றது. சமூக, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெற்ற திருகோணமலை நகரின் கரையோரத்தினை ஆய்வு செய்வதும் அவசியமானதொன்றாகும். அந்தவகையில் திருகோணமலை நகரின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் கரையோர மாற்றத்தை அடையாளம் காணுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் முதலாம் வகை தரவு சேகரிப்பில் நேரடி அவதானமானது 10 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய கரையோரப் பகுதி அவதானிக்கப்பட்டதுடன் அங்குள்ள பிரதேச மக்கள்,மீனவர்கள். முத்துக்குளிப்பவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கரையோரப் பகுதியின் மாற்றம், குடியிருப்புப் பாங்கு மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு கரையோரப் பாதுகாப்பு அதிகாரி, நில அளவையாளர்கள், மீன்வளம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் போன்றோருடன் நேர்காணல் நடாத்தப்பட்டுள்ளது. தரவுப் பகுப்பாய்விற்காக Arc GIS 10.4 மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் NDVI, NDWI ஆகியன கணக்கிடப்பட்டுள்ளது. நீண்ட கால மாற்றங்களைக் கண்டறிவதற்கு Landsat 7 மற்றும் Landsat 9 ஆகிய செய்மதிப் படங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் குறுங்கால மாற்றத்தினை கண்டறிவதற்கு Google Earth Pro ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. 2002 2012 வரையில் கரையோரமானது 50m கடலினுள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் 2012 தொடக்கம் 2022 வரையிலான காலப் பகுதியினுள் கரையோரப் பகுதியில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் முருகாபுரி மற்றும் பட்டணத்தெரு பகுதிகளில் மாத்திரம் கடலானது முன்நகர்ந்துள்ளது. ஆய்வுப் பிரதேசத்தின் கரையோர மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் பௌதிக காரணிகளாக பருவக்காற்றுக் காலநிலை, அலைகளின் தாக்கம், வற்றுப் பெருக்கு இயற்கை அனர்த்தம், கடல்மட்ட உயர்வு என்பனவும் மானிட காரணிகளாக மணல் அகழ்வு, கரையோரத் தாவரங்களை அழித்தல், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்துமீறிய குடியிருப்புக்கள் என்பனவும் அடையாளங் காணப்பட்டுள்ளன