Abstract:
"சிவனொளிபாதமலை சுற்றுலா மையம் எதிர்கொள்ளும் சவால்கள்" என்ற தலைப்பிலான இவ்வாய்வானது சிவனொளிபாதமலை சுற்றுலா மையம் மற்றும் அங்கு எதிர்கொள்ளப்படுகின்ற சவால்களைப் பற்றி ஆராய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது முதலாம் நிலை தரவுகளான வினாக்கொத்து, நேர்காணல், நேரடி அவதானம், கலந்துரையாடல்கள் மூலமாகவும், இரண்டாம் நிலை தரவுகளான மத்திய வங்கி ஆண்டறிக்கைகள், பிரதேச சபை ஆண்டறிக்கை, பொலிஸ் நிலையத்தின் பதிவுகளிலிருந்து தரவுகள் பெறப்பட்டு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் மார்ச் 19 - ஏப்ரல் 16 வரையிலான காலப்பகுதியினுள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7 மணி தொடக்கம் மாலை 2 மணி வரையில் குறித்த சுற்றுலா தளத்திற்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளிலிருந்து 3 சதவீத அடிப்படையில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் 61 வினாக்கொத்துக்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து 12 வினாக்கொத்துக்களும் வழங்கப்பட்டு மொத்தமாக 73 வினாக்கொத்துக்கள் வாடாக ஆய்வுக்கு தேவையான விடயங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் MS Excel 2016 மென்பொருள் மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதுடன் Arc GIS 10.3.1, Google Earth, Maps me ஆகிய மென்பொருட்கள் மூலம் தரைத்தோற்றம் சார்ந்த விடயங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு படமாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் பெறுபேற்றின்படி சிவனொளிபாதமலை சுற்றுலா மையமானது நாட்டிற்கு அந்நியசெலாவணியை பெற்றுத்தரும் முக்கிய சுற்றுலாத்தளமாகக் காணப்படுவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் சில சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. சுற்றுலா மையத்திற்கு வருகை தந்தவர்களில் 44 சதவீதமானவர்கள் புனித பாதத்தை தரிசிப்பதற்காக வருகை தந்திருந்ததாக அறியமுடிந்ததுடன், 70 சதவீதமானவர்கள் இவ்மையத்தில் இயற்கை குழலானது அழிக்கப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். சுற்றுலா மையத்தில் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவம் முறையாக பின்பற்றப்படாமை காரணமாகவே அதிகளவான சூழல் சார்ந்த சவால்கள் ஏற்படுகின்றன. அதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டு 145 தொன்களாகக் காணப்பட்ட திண்மக் கழிவுகளின் அளவானது, 2022 ஆம் ஆண்டில் 385 தொன்களாக அதிகரித்துள்ளது. அதேபோல சுற்றுலா மையத்தில் எதிர்கொள்ளப்படுகின்ற சமூகம் சார்ந்த சவால்கள், பொருளாதாரம் சார்ந்த சவால்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சுற்றுலா மையத்தில் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்களுக்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளும் ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளன