Abstract:
எமது நாட்டில் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டாலும் கூட மாணவர்களின் சுற்றலில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றது. இந்தவகையில் குடும்பபொருளாதார பின்னடைவு தரம் 10,11 மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கத்தினை கண்டறிவதனை நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வானது அமையப்பெறுகின்றது. இவ் ஆய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கோட்டப் பாடசாலைகளில் உள்ள தரம் 10, 11 மாணவர்களை உள்ளடக்கிய ஓர் அளவை நிலை ஆய்வாகும் போரதீவுப் பற்றுக கோட்டமானது 33 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. தரம் 10, 11 மாணவர்களின் குடும்ப பொருளாதாரப் பின்னடைவை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டமையினால் 10ம், 11ம் தரங்களை உள்ளடக்கிய பாடசாலைகள் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு போக்குவரத்து பிரச்சனை, ஆய்விற்கான தூரம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு வசதி மாதிரியின் அடிப்படையில் 07 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப பொருளாதார பின்னடைவைக் கொண்ட 114 மாணவர்கள் நோக்க மாதிரியில் தெரிவு செய்யப்பட்டதுடன் இவ் 114 மாணவர்களின் பெற்றோர்களில் இருந்து இலகு எழுமாற்று மாதியின் அடிப்படையில் 2:1 என்ற விகிதத்தில் 57 பெற்றோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 07 பாடசாலைகளில் இருந்தும் தரம் 10, 11ற்கு கற்பிக்கும் 94 ஆசிரியர்களும் ஆண், பெண் என படையாக்கம் செய்யப்பட்டு எளிய இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 21 என்ற விகிதத்தில் 47 ஆசிரியர்களும், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 07 அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளிடம் வினாக்கொத்து, நேர்காணல் எனும் ஆய்வுக கருவிகளின் மூலம் தரவுகள் பெறப்பட்டு பண்பு ரீதியாகவும், அளவு ரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Microsoft Excel மென்பொருளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து குடும்ப பொருளாதாரப் பின்னடைவுடைய மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கங்களாக சுய கற்றலுக்கான வசதியின்மை, தொடர்ச்சியான பாடசாலை வருகை இன்மை, பெற்றோர் மாணவர்களை தொழிலுக்கு அனுப்புதல், கற்றல் உபகரணங்கள் சரியாக கிடைக்காமை, பெற்றோர் பாடசாலை தொர்பு இன்மை, கற்பதற்கான குடும்பச் சூழல் காணப்படாமை, பாடசாலையில் உற்சாகமாக செயற்படுவதற்குரிய போசணை கிடைக்காமை போன்ற முடிவுகள் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரம் 10,11 மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கத்தினைக் . குறைப்பதற்கான விதப்புரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.