Abstract:
ஒரு மாணவரின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதில் கல்வி முக்கிய இடம் வகிக்கின்றது. இதன் அடிப்படையில் "சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் இடைவிலகலில் தாக்கம் செலுத்தும் குடும்பம்சார் காரணிகள்" எனும் தலைப்பில் அமைந்த இவ் அளவை நிலை ஆய்வின் முக்கிய நோக்கம் சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களுடைய இடைவிலகலில் தாக்கம் செலுத்துகின்ற குடும்பம்சார் காரணிகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறிதல், திருகோணமலைக் கோட்டத்தில் உள்ள 43 பாடசாலைகளில் நோக்க மாதிரியின் மூலம் 11 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இவற்றில் 1AB பாடசாலைகள் இரண்டும். IC பாடசாலைகள் மூன்றும், வகை!! பாடசாலைகள் ஆறும் உள்ளடங்குகின்றன. நோக்க மாதிரியின் அடிப்படையில் 11 அதிபர்களும், 34 சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு வகுப்பாசிரியர்களும், 45 இடைவிலகிய மாணவர்களும், 45 இடைவிலகிய மாணவர்களுடைய பெற்றோர்களும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து நேர்காணல், வினாக்கொத்து, ஆவணம் போன்ற ஆய்வுக் கருவிகள் ஊடாகவும், அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Microsoft Excel மென்பொருளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அட்டவணைகள், சலாகைகள் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. தரவுப்பகுப்பாய்வு மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளாக மாணவர்களுடைய இடைவிலகலில் தாக்கம் செலுத்தும் குடும்பக் காரணிகளாக வறுமை, பெற்றோர் மறுமணம், பொருத்தமற்ற வீட்டுச் சூழல், குடும்பத்தினால் பாடசாலைத் தேவைகள் நிறைவேற்றப்படாமை, பெற்றோரின் ஒத்துழைப்பின்மை, பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு ஒழுங்கான முறையில் அனுப்பாமை, குடும்பப் பிளவு. மாணவர்கள் குடும்பப் பொறுப்பேற்றல், பெற்றோர் வெளிநாடு செல்லல், பொருளாதாரப் பிரச்சினை, பெற்றோர்களுடைய குறைந்த கல்வியறிவு, பெற்றோர்களுக்கும் பாடசாலைக்கும் தொடர்பு குறைவு. ஆசிரியர் பெற்றோரிற்கு இடையிலான தொடர்பு குறைவான நிலை, குடும்பத்தினரின் போதைவஸ்துப்பாவனை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. இதன்படி இம்மாணவர்களுடைய இடைவிலகலில் தாக்கம் செலுத்தும் குடும்பம்சார் காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மாணவர்களின் இடைவிலகலில் தாக்கம் செலுத்தும் குடும்பம்சார் காரணிகளை நிவர்த்தி செய்து மாணவர்கள் இடைவிலகாது கல்வியினை தொடர வேண்டும் என்ற வகையில் விதந்துரைப்புக்களும் இவ்வாய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன.