Abstract:
இலங்கையின் கல்வி திட்டத்தில் பல நன்மைகள் காணப்பட்டிருந்தாலும் பல்வேறு பிரச்சினைகளையும் கொண்டமைந்து விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இந்தடிப்படையில் இவ்வாய்வானது முன் பள்ளி பாடசாலைகளில் முன் திட்டமிடப்படாத கற்பித்தல் செயற்பாடுகள் மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கத்தினை கண்டறிந்து விதப்புரைகளை முன்மொழிவதாகும். நாவிதன்வெளிக்கோட்டத்தில் 26 முன் பள்ளி பாடசாலைகளும் அதில் 58 ஆசிரியர்கள் கல்வி கற்பித்துக்கொண்டு வருகின்றார்கள். அந்த 26 முன் பள்ளி பாடசாலைகளில் 875 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர். இங்கு 26 முன்பள்ளி பாடசாலைகளிலும் இருந்து 7 முன்பள்ளி பாடசாலைகள் வசதி மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. வசதி மாதிரி அடிப்படையில் என்பது 26 பாடசாலைகளிலும் ஒரு சில பாடசாலைகள் இயங்காத நிலை, போக்குவரத்து வசதிகளற்ற இடத்தில் அமைந்திருத்தல் போன்ற காரணங்களினால்7 பாடசாலைகள் வசதி மாதிரி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.7 முன்பள்ளி பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் 15 பேரில் இருந்து 15 பேர் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 7 முன்பள்ளி பாடசாலைகளிலும் 223 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இவர்களில் ஆண் பெண் எனும் அடிப்படையில் 2:1 எனும் மாணவர்களது விகிதத்தில் 110 மாணவர்கள் படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அவர்களது பெற்றோர்கள் 110 பேரும், அதேபோல் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் நோக்க அடிப்படையில் 1 வரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளிடம் இருந்து வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் என்னும் ஆய்வுக்கருவிகள் மூலம் தரவுகள் பெறப்பட்டன. பண்பு ரீதியாகவும், அளவு ரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Excel மென்பொருளின் ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவனைகள், வரைவுகள் மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன. முன்பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கல்வி தகைமை குறைந்தவர்களாகவும், ஆசிரிய மாணவரிடையே நேரமுகாமை இன்மை,மாணவர்கள் வாசிப்பு,விளையாட்டு போன்றவற்றில் ஈடுபாடின்மை, மாணவர்களது வரவு குறைவு, கற்பதில் விரக்தி முதலிய பல முடிவுகளை கொண்டு இவ் ஆய்வு அமையப்பெற்றுள்ளது.