Abstract:
திருகோணமலை பிராந்திய வரலாற்றிலும், நிர்வாக முறைகளிலும் வன்னியர்களுக்கு முக்கிய பங்குண்டு, இவர்கள் திருகோணமலை அரசியல் முறைகளிலும், சமூக வழமைகளிலும், பொருளாதாரத்திலும் முக்கியத்துவம் பெற்றிருந்துள்ளார்களா?, அது சார்ந்து அவர்களது அதிகாரத்தினுடைய தன்மையானது எவ்வாறு இருந்துள்ளது. என்பதனைக் கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது திருகோணமலை வன்னிச் சிற்றரசுகள் தொடர்பாகக் கிடைக்கக்கூடிய சான்றுகளினை அடிப்படையாகக் கொண்டு வன்னியர்கள் திருகோணமலைக்கு வந்ததாகக் கருதப்படும் காலப்பகுதியில் இருந்து ஐரோப்பியர்களது காலனித்துவ ஆட்சிக் காலம் வரையிலும் அவர்களது அதிகாரநிலை தொடர்பாக ஆராய்ந்து திருகோணமலை வரலாற்றிலே வன்னியர்களின் முக்கியத்துவம் என்ன?, அவர்களது அதிகாரம் ஏதேச்சாதிகாரமாகக் காணப்பட்டதா?, வரையறுக்கப்பட்டிருந்ததா? போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறும் வகையில் தெளிவான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டமைந்துள்ளது. ஆட்சியதிகாரத்திலும் முதன்மையானதொரு மத்தியகாலத் திருகோணமலையிலே வன்னிமைகள் சமூக இடத்தினையே வழமைகளிலும். பொருளாதாரத்திலும் பெற்றிருந்துள்ளனர். பற்றுக்கள் ஒவ்வொன்றிலும் வன்னிமைகள் மிகுந்த அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்பட்ட போதிலும் அவர்களது ஆட்சியானது எதேச்சாதிகாரமாக இருக்காது வரையறுக்கப்பட்டதாகவே காணப்பட்டுள்ளது. மேலாதிக்கம் செலுத்தக்கூடிய அரசுகளின் கீழ் வன்னிமைகள் சில காலங்களில் இருந்தாலும் தமது பற்றுக்களில் சுதந்திரமான ஆட்சியினையே செலுத்தியிருந்துள்ளனர். திருகோணமலையில் ஐரோப்பியர்களது காலனித்துவ ஆட்சியின் ஆரம்ப கால கட்டங்களில் வன்னிமைகள் பெற்றிருந்த ஆட்சியதிகாரம் படிப்படியாகக் குறைவடைந்து சென்றாலும், சமூக வழமைகள் மற்றும் பொருளாதார ரீதியில் வன்னிமைகள் முக்கியத்துவம் பெற்றவர்களாகவே இருந்துள்ளனர். ஆயினும் காலப்போக்கில் பிரித்தானியர்களது ஆட்சியிலே வன்னியர்களது அதிகாரங்கள் குறைவடைந்து சென்றமையினால் வன்னியர்கள் பெற்றிருந்த சமூக, பொருளாதார ரீதியிலான முக்கியத்துவங்களும் குறைவடைந்து தற்காலத்தில் வன்னியர்கள் என்றதொரு பிரிவினர் இல்லாமலேயே போயுள்ளனர்.