Abstract:
"மொழித்திறன் விருத்திக் குறைபாடு மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம்" என்ற தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது மூதூர் கோட்ட பாடசாலைகளில் உள்ள தரம் 6 மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வாகும். இது தரம் 6 மாணவர்களின் மொழித்திறன் விருத்திக் குறைபாடு அவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கங்களை கண்டறிவதை நோக்காகக் கொண்டு இடம்பெற்றுள்ளது. மூதூர் கல்விக் கோட்டமானது 54 பாடசாலைகளைக் கொண்டுள்ளது. மொழித்திறன் குறைபாட்டினை தரம் 6 மாணவர்களின் மொழித்திறன் விருத்திக் குறைபாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டமையினால் பாடசாலைகள் தரங்களின் அடிப்படையில் படையாக்கம் செய்யப்பட்டு அதிலிருந்து இலகு எழுமாற்று மாதிரியின் ஊடாக IAB-01, IC-03, வகை11-06 பாடசாலைகள் 31 என்கின்ற விகிதத்தில் பத்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மொழித்திறன் விருத்திக் குறைந்த மாணவர்கள் 54 பேர் காணப்படுகின்றனர். இம்மாணவர்களும், இவர்களது பெற்றோர்கள் 54 பேரும், தமிழ்ப்பாடம் கற்பிக்கும் 12 ஆசிரியர்களும், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் 10 பேரும் நோக்க மாதிரியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளிடம் இருந்து வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் என்னும் ஆய்வுக் கருவிகள் மூலம் தரவுகள் பெறப்பட்டன. பண்பு ரீதியாகவும், அளவு ரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Excel மென்பொருளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து பின்வரும் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. மொழித்திறன் விருத்திக் குறைபாடுடைய மாணவர்களின் கற்றல் நிலைமையானது பின்தங்கிய நிலையில் காணப்படுவதுடன் அதில் எழுத்துக்களை இனங்காணல், வாசிப்புத் திறன் பின்னடைவு என்பன கூடுதலாக செல்வாக்கு செலுத்துகின்றன. அதனைத் தொடர்ந்து தரம் 6 மாணவர்களில் மொழித்திறன் விருத்தியை மேம்படுத்துவதற்கான விதப்புரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.