Abstract:
ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட ஏறாவூர்-5 (194A) கிராம சேவகர் பிரிவை மையப்படுத்தி "குடும்பக் கட்டமைப்புச் சிதைவு பெண்கள், சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் : ஏறாவூர்-5 பிரதேசத்தை மையப்படுத்திய ஒரு சமூகவியல் ஆய்வு" எனும் தலைப்பின் கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக அமைப்பின் இயக்கத்திற்கு முக்கியமான ஒன்றாக குடும்பம் எனும் சமூக நிறுவனம் காணப்படுகின்றது. குடும்பம் எனும் அமைப்பானது ஓர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமுதாய மரபுப்படி மணவாழ்வில் ஈடுபடும் நிலையால் மட்டுமே தோன்ற முடியும். சமூகத்தின் எந்தவொரு தோற்றப்பாட்டிலும் நிகழ்வது போலவே எல்லா சமூகங்களிலும் குடும்பக் கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஆய்வாளருடைய ஆய்வுப் பிரதேசத்தின் குடும்பக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்படும் சிதைவானது எதிர்மறையான தாக்கங்களை அக்குடும்பத்திலுள்ள ஏனைய உறுப்பினர்களிடத்தில் ஏற்படுத்துகின்றது. அதாவது குடும்பத்தில் விவாகரத்து, பிரிவு, மறுமணம், இறப்பு, தற்கொலை, விபத்து போன்ற காரணங்களினால் குடும்பத்தின் கட்டமைப்பானது சீர்குலைக்கப்படுகின்ற போது குடும்பத் தலைவன் இல்லாத குடும்பமே அதிகமான பாதிப்பினை எதிர்நோக்குகின்றது. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்களைக் கொண்டமைந்த குடும்பமே உடல், உள, சமூக, கலாசார, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாக பாரிய தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறான விடயங்களை ஆராய்வதாகவே இவ்வாய்வானது காணப்படுகின்றது. இவ் ஆய்விற்கான தரவுகள் திட்டமிட்ட எழுமாற்று மாதிரியைப் பயன்படுத்தி வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் எனும் முறைகளைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்டு, அளவு மற்றும் பண்பு ரீதியான முறைகளினூடாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. பகுப்பாய்வினூடாக, குடும்பக் கட்டமைப்பானது சிதைவுறுவதால், அக் குடும்பத்திலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு உடல், உள. பொருளாதார, சமூக, கலாசார மற்றும் பாதுகாப்பு ரீதியாக பல பிரச்சினைகள் காணப்படுவது கண்டறியப்பட்டன. இவ்வாறான பிரச்சினைகளைப் பின்வருமாறு விளக்கமாகப் பார்ப்பதுடன், அவற்றைக் குறைப்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்து, நேர்நிலையான சமூகத்தினைக் கட்டமைக்க வழி சேர்ப்பதாகவே இவ் ஆய்வானது காணப்படுகின்றது.