dc.description.abstract |
"மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்" என்பது கச்சியப்ப சிவாசாரியார் வாக்கு. இவ்வாக்கிற்கு அமைய இந்து மதத்தின் பல கூறுகளும், பண்பாடுகளும் இன்று மேலைத்தேய கலாசாரம் கொண்ட இந்து மதத்தோடு தொடர்பில்லாத மேலைத்தேய நாடுகளில் சிறந்த முறையில் கடைபிடிக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வருகின்றது. இந்து மதம் தோன்றி வளர்ந்த எமது நாடுகளைக் காட்டிலும் இம் மேலைநாடுகளில் பெரும் செல்வாக்கினைப் பெற்றுக் காணப்படுகின்றது.
இவ்வகையில் இவ்வாய்வானது ஐந்து அத்தியாயங்களைக் கொண்டு ஆராய்கிறது. இதில் முதல் அத்தியாயமானது ஆய்வு பற்றிய அறிமுகமாகக் காணப்படுகின்றது. அதாவது ஆய்வுத் தலைப்பு, ஆய்வு அறிமுகம், ஆய்வின் நோக்கம், ஆய்வுப் பிரச்சினை, ஆய்வு வரையறை, ஆய்வு முறையியல், ஆய்வு மூலங்கள், இலக்கிய மீளாய்வு. ஆய்வுப் பகுப்பு என்பவற்றை உள்ளடக்கியதாக அமைகின்ற அதேவேளை இரண்டாவது அத்தியாயம் மேலைத்தேய நாடுகளில் இந்து மதம் மற்றும் பண்பாடு பரவ அடிப்படையாக அமைந்த காரணிகளான புலம்பெயர் தமிழர், இந்து மத ஆளுமைகள் மற்றும் மேலைநாட்டு அறிஞர்கள் தொடர்பில் ஆராய்கின்றது.
மூன்றாவது அத்தியாயத்தில் இவ்வாய்வின் தலைப்பினை மையமாகக் கொண்டு மேலைத்தேய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளான கனடா, லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்த் போன்ற நாடுகளில் வெளிவரும் இந்து சஞ்சிகைகள், ஆய்வு இதழ்கள் மற்றும் அதனை வெளிவிடும் அமைப்புகள் தொடர்பில் ஆராயப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நான்காவது அத்தியாயமானது இந்நாடுகளில் வெளிவரும் இந்து சஞ்சிகைகளின் நோக்கங்கள் மற்றும் இச்சஞ்சிகைகளில் பரவிக் காணப்படும் இந்துமதக் கருத்துக்கள் நிரம்பிய கட்டுரைகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது. தொடர்ந்து ஐந்தாவது அத்தியாயமானது ஆய்வின் மூலம் பெறப்பட்ட விடயங்களைத் தொகுத்து நிறைவுரையைக் கூறுவதாக அமையப்பெற்றுள்ளது.
இவ்வகையில் இவ்வாய்வானது மேலைத்தேய நாடுகளில் வெளிவரும் அன்புநெறி, ஆத்மஜோதி, கலசம், Journal of Hindu Studies, சிவஒளி, மின்மினி, Hinduism Today ஆகிய இந்து சஞ்சிகைகள் அங்கு புலம்பெயர்ந்து வாழும் இந்து சுதேச மக்களிடத்திலும் அந்நாட்டு மக்களிடத்திலும் இந்து மதக் கருத்துக்களை எவ்வகையில் பரப்புகின்றது என்பதனை ஒருங்கிணைத்து தருவதோடு இந்துப் பண்பாட்டினைப் பரப்பும் ஓர் ஊடகமாக எத்தகைய பணிகளை ஆற்றுகின்றது என்பது பற்றியும் அந் நாடுகளில் இந்து மதம்
கொண்டுள்ள செல்வாக்கு என்பவற்றையும் தெரியப்படுத்துவதாக அமைந்துள்ளது. |
en_US |