Abstract:
2019 இல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவலடைந்த கொவிட்-19 தொற்றுநோயானது 2020 ஆரம்ப காலப்பகுதியில் இலங்கையிலும் பரவலடைந்தது. இத்தொற்றுநோயினைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கமானது பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன்படி இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கொவிட்- 19 தொற்றுநோயின் முதலாம் அலையினைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்த போதும் இரண்டாம் அலையின் வீரியம் இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது. இதன் காரணமாக அரசாங்கமானது கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி தொற்றுநோயினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இவ்வாறு அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கடுமையான சட்டதிட்டங்கள் மக்களினுடைய உரிமைகள் மீது பாதிப்புச் செலுத்தி, உரிமைகள் மீறப்படுவதற்கு காரணமாக அமைந்தன. இருந்த போதும் இலங்கை அரசாங்கமானது அரசியல் யாப்பின் III ஆம் அத்தியாயத்தில் 15 ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ள விடயங்களை காரணம் காட்டி தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. இலங்கை அரசியல் யாப்பில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்படுகின்ற போதும் அவற்றின் நடைமுறை பிரயோகமானது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மீதான மட்டுப்பாடுகளின் வழியாக செயலிழக்கப்படுகின்றது. இத்தகைய பின்னணியில் கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும், அரசியல் யாப்பில் காணப்படும் உரிமைகள் மீதான மட்டுப்பாடுகளையும், உரிமைகளுக்கான பாதுகாப்புப் பொறிமுறைகளின் நடைமுறை பிரயோகங்கள் என்பன தொடர்பாக பகுப்பாய்வு செய்வதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.