Abstract:
தேசிய அரசுகளாக விளங்குகின்ற நாடுகள் தமது சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் பல்வேறுபட்ட தேசிய நலன் சார்ந்த கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது. தேசிய கொள்கையின் ஒரு பகுதியாகிய வெளியுறவுக் கொள்கையானது தேசிய நலனை அடிப்படையாக கொண்டதாகும். அரசுகள் தமது தேசிய நலன்களை சர்வதேச மட்டத்தில் சாத்தியமாக்கிக் கொள்வதற்கு வெளியுறவுக் கொள்கையை பயன்படுத்துவதோடு, அதனூடாக ஏனைய அரசுகளுடன் உறவுகளைப் பேணுகின்றன. மனித உரிமைகள் என்பது எப்போதும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் போட்டியிடுகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. ஒரு நாட்டின் அதிகாரமானது சட்டத்தின் வழி இயங்குவதற்கான நெறிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். குறித்த நாடானது மனித உரிமைகளில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இல்லையாயின், ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகளின் தலையீடுகள் தவிர்க்க முடியாததாகிவிடும். ஓர் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகையில் அந்நாடு அது பற்றிய பொறுப்புக்கூறலை மேற்கொள்வதில் சர்வதேசத்தின் பங்கு இன்றியமையாது. யுத்தத்தின் பின்னரான இலங்கையின் மனித உரிமை நிலையானது இலங்கையை சர்வதேச அழுத்தத்திற்கு உள்ளாக்கி அதன் மூலம் எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளன என்றும் அச் சவால்கள் வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படும் விதம் என்பனவும் இங்கு ஆராயப்படுகின்றது.