Abstract:
"மலையக அரசியலில் பெண்களின் தலைமைத்துவம் - கோ.ந மீனாட்சியம்மாளை உட்படுத்திய ஒரு ஆய்வு" என்ற ஆய்வினை சுருக்கமாக பார்க்கும் போது பிரதானமாக இதில் இரண்டு விடயங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றது. ஒன்று மலையக அரசியலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் கோ. ந. மீனாட்சியம்மையின் அரசியல் தலைமைத்துவம். இவ் இரண்டு விடயங்களைக் கொண்டே இவ்வாய்வு முன்வைக்கப்பட்டுள்ளது. மலையக அரசியலில் பெண்களின் அரசியல் தலைமைத்துவம் என்பதை பார்ப்பதற்காக இங்கு அரசியல் என்றால் என்ன, தலைமைத்துவம் என்றால் என்ன, பெண்களின் அரசியல் நிலைமை பொதுவாகவே எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை எடுத்து நோக்குவதோடு, இலங்கையிலும் பெண்களின் அரசியல் நிலைமை எவ்வாறு காணப்படுகிறது என்பதும் எடுத்து நோக்கப்படுகின்றது. மேலும் மலையக மக்கள் என்போர் யார், அவர்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள் என்பதனை விபரித்து அவர்களின் அரசியல் பற்றியும் பார்க்கப்படுகின்றது. அத்துடன் மலையக அரசியலில் பெண்களின் வகிபங்கு பற்றியும் விளக்கப்படுகின்றது. மேலும் மீனாட்சியம்மையின் அரசியல் ஆளுமை சார்ந்தும் நோக்கப்படுவதோடு அவரின் உன்னத பணிக்கு துணையாகவும் வித்திட்டவராகவும் அமைந்த நடேசய்யர் சார்ந்தும் நோக்கப்படுவதுடன், மலையக அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க யாது செய்யலாம் என்பது தொடர்பாகவும் பரிந்துரையினூடாக எடுத்துரைக்கப்படுகின்றது.