Abstract:
தேசிய கொள்கையின் ஒரு பகுதியாகிய வெளிநாட்டுக் கொள்கையானது தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டதாகும். அரசுகள் தமது தேசிய நலன்களை சர்வதேச மட்டத்தில் சாத்தியமாக்கிக் கொள்வதற்கு வெளிநாட்டு கொள்கையை பயன்படுத்துவதோடு அதனூடாக ஏனைய அரசுகளுடன் உறவுகளை பேணுகின்றன. ஒரு நாடு அயல்நாடுகளுடன் எவ்வகையில் உறவுகளை வளர்ப்பது என்பதை தானே தீர்மானிக்கிறது. ஒரு நாடு தனது சர்வதேச எல்லைகளை பாதுகாப்பதன் ஊடாக தனது அரசியல் சுதந்திரத்தையும் ஆள்புல ஒருமைப்பாட்டினையும் பாதுகாப்பதுடன் பிற நாடுகளுடன் தனது இராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியான உறவினையும் பேணுகின்றது. இவ்வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் சீனாவுடனான நெருங்கிய உறவு பிரதான இடம் வகிக்கின்றது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருங்கிய அரசியல்- பொருளாதார உறவானது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு யுத்தத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இலங்கை சார்பாக சீனா தனது வாக்கினை பயன்படுத்தி வந்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் பொருளாதாரப் பங்காளராக வலுவானதொரு வகிபங்கினை சீனா பெற்றுக் கொண்டது. சீனாவுடனான இலங்கையின் பொருளாதார நெருக்கம் சர்வதேச அளவில் பெரும் அச்சத்துடன் பார்க்கப்படுகிறது. சர்வதேச சூழலை புரிந்து கொண்டு இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையினை வகுத்துக் கொள்வதில் கைதேர்ந்தது.இலங்கையின் சர்வதேச முக்கியத்துவம் கருதி சர்வதேச நாடுகள் இலங்கையுடன் நட்புறவினை பேணவே விரும்புகின்றன. இச்சாதகமான சர்வதேச சூழலை பயன்படுத்தும் அதேநேரம் சீனாவுடன் இராஜதந்திர உறவினை வளர்த்து இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய இலங்கை முயற்சிக்கின்றது. இத்தந்திரோபாய அரசியல் விளையாட்டில் ஈடுபடும் இலங்கை சர்வதேச அளவில் அதிகாரப்போட்டியில்
ஈடுபடும் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளினால் எதிர்நோக்கும் எதிர்வினைகள் இங்கு பகுப்பாய்வு
செய்யப்படுகிறது.