Abstract:
மார்க்ஸினது கொள்கைகள் இன்று வரை சமூகத்தில் தாக்கம் செலுத்திய வண்ணமே உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட முதன்மை நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் உலக மக்களை மீண்டும் மார்க்ஸை நோக்கி திரும்பவைத்தது. அந்த வகையில், மார்க்ஸிசம் இவ் உலகில் உள்ளோரை இரு பகுதியாக பிரித்துள்ளது. ஒன்று மார்க்ஸிய ஆதரவாளர்கள், மற்றொன்று மார்க்ஸியத்தை வெறுப்பவர்கள். இருப்பினும் இவ்விருதரப்பினரும் மார்க்ஸினது சமய விமர்சனத்தில் ஒரு கருத்தையே முன்வைக்கின்றனர். மார்க்ஸ், மனித விடுதலைப் போராட்டத்தில் சமயத்தை புறந்தள்ளிவிட்டார் எனவும், "மதம் மக்களின் அபினி" எனும் கோட்பாட்டை வறட்டுத்தனமாக பின்பற்றுகிறோம் எனவும் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இக் கருத்து மார்க்ஸிற்கு எதிராக முன்வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு ஆகும். உண்மையில் மார்க்ஸினுடைய சமய விமர்சனம் தவறாக விளக்கப்படுகிறது, அச் சமயக் கருத்தை தவறாக பிரச்சாரம் செய்வோரும் தங்களை மார்க்ஸியவாதிகள் என்றே கூறிக் கொள்கின்றனர். ஆகவே, "மார்க்ஸிசத்தின் சமய விமர்சனம் ஓர் மெய்யியல் ரீதியிலான பகுப்பாய்வு" செய்வதை இவ்வாய்வானது பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. மார்க்ஸியத்தின் குறைகளை நிறைவு செய்ய வேண்டும் எனக் கூறிக்கொள்ளும் மார்க்ஸியர்கள், மார்க்ஸியக் கொள்கைகளையே தீவிர நாத்திகம் என விபரித்துக் கூறுகிறார்கள். இதுவே ஆய்வுப் பிரச்சனையாக உள்ளது. மார்க்ஸியக் கொள்கைகளை தெளிவாக ஆராயாமல் ஒரு சில கருத்துக்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு அதையே முழுத்தத்துவமாக விபரிக்கும் மார்க்ஸியர்கள் உள்ளனர். இவ்வாறான செயல்களால் மார்க்ஸியத்திற்கு எதிரான கருத்துக்கள் கூட மார்க்ஸிசம் என்ற பெயர் தாங்கியே நடமாடுகிறது. இவ்வாறன விடயங்கள் ஆய்வின் முக்கிய கருதுகோள்களாக முன்வைக்கப்படுகின்றன. ஆக, இவ்வாய்வானது இந்த கருதுகோளை தெளிவுபடுத்துவதற்காக மார்க்ஸிய மூலவர்களான காள்மார்க்ஸ், ஏங்கில்ஸ், லெனின் போன்றோரின் நூல்களை முதல் நிலை தரவுகளாகவும், மார்க்ஸின் சமயக் கருத்துக்கள் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், சஞ்சிகைகள், வாரஇதழ்கள், இணையத்தளம் மூலம் பெற்றுக் கொண்ட தரவுகள் போன்றவற்றை இரண்டாம் நிலை தரவுகளாகவும்.
தொகுத்தறி முறை மற்றும் பண்புசார் விமர்சனப் பகுப்பாய்வு முறைகளையும்
பயன்படுத்துகின்றது.