Abstract:
இன்றைய காலக்கட்டங்களில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக சிறுவர் உரிமை மீறல்கள் காணப்படுகிறது. சிறுவர்களுக்கு உரித்தான உரிமைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்காமல் மறுப்பது சிறுவர் உரிமை மீறல் எனப்படுகிறது. சிறுவர் உரிமை மீறலில் ஆண், பெண் பாகுபாடின்றி இருபாலாரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான இடங்களில் சிறுவர் உரிமைகள் வீட்டிலேயும், வீட்டிற்கு வெளியேயும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய உரிமை மீறலுக்கு உள்ளாகும் சிறுவர்கள் பல்வேறு உடல்சார், உளவியல் சார் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதை சமூகத்தில் காணமுடிகிறது. இத்தகைய உரிமை மீறல்கள் அதிகளவில் இடம்பெற பெற்றோரின் பாதுகாப்பு சிறந்த முறையில் பிள்ளைகளுக்கு கிடைக்கப் பெறாமை, பெற்றோரிடமிருந்து தனிமைப்படுத்தப்படல் முதலிய காரணங்களை குறிப்பிடலாம். இதனால் சிறுவர்கள் பாடசாலை இடைவிலகல், போதைப்பொருள் பாவனைக்கு உட்படல், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படல், வன்செயலுக்கு உட்படுத்தப்படல், புறக்கணிப்புக்கு உள்ளாதல் போன்ற உரிமை மீறலுக்கு உள்ளாகின்ற நிலையை அவதானிக்க முடிகிறது.
இவ்வாய்வானது மாத்தளை மாவட்ட பிரதேச செயலகத்தின் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளான நாரங்கமுவ, மொரகஹமட அங்கந்த, மந்தண்டாவெல, உடுகம ஆகிய கிராம சேவகர் பிரிவில் எவ்வாறான சிறுவர் உரிமை மீறல்கள் ஏற்படுகின்றன அதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை கண்டறிதலையும் அதனை தடுப்பதற்கான காரணத்தை பரிந்துரை செய்தலையும் பிரதான நோக்கமாக கொண்டது. சிறுவர் உரிமை மீறலினால் சிறுவர்களின் எதிர்க்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே இவ்வாறான சூழல் மாற்றமடைய வேண்டும் சிறுவர்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். எனவே சிறுவர்களின் உரிமை மீறலினை தடுக்க வேண்டுமானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் மற்றும் நீதித்துறை ஆகிய சமூக நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது ஆய்வின் வலியுறுத்தலாகும்.