Abstract:
மனித வரலாறு எவ்வளவு பழமையானதோ, அது போலவே அறிவும் பழமையானது. குறிப்பாக பழங்காலத்தில் அறிவு வேட்கையானது ஆட்சிக்குட்படுத்தி பணி செய்வதற்கு அறிவு எனும் எண்ணக்கரு இன்றியமைந்ததாகும். மெய்யியலின் முதன்மைக்குரிய பகுதிகளுள் ஒன்றாக அறிவாராய்ச்சியியல் காணப்படுகின்றது. அறிவாராய்ச்சியியலானது அறிவு பற்றி ஆராய்கின்ற ஒரு துறையாக காணப்படுகின்றது. மனித அறிவினுடைய தோற்றம், இயல்பு மற்றும் எல்லைகள் தொடர்பான மெய்யியல் ரீதியான கற்கைகளாக விளங்குகின்றது. அறிவைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைகின்ற பிரமாணங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்துகின்றது. மெய்யியல் பாடப்பரப்பில் அறிவு முதன்மையானதாகும். அறிவை ஆராயாத ஓர் மெய்யியல் ஆய்வானது பயனற்றதாகவே காணப்படுகிறது. மேலைத்தேய மெய்யியலில் ஆதிகிரேக்க காலம் முதல் இப்பிரச்சினைகள் ஆராயப்பட்டாலும் கிரேக்க காலத்திலேயே இதன் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்ளலாம்.
குறிப்பாக அறிவை ஒருவர் புற ரீதியாகவோ அல்லது அக ரீதியாகவோ பெற்றுக் கொள்வதற்கு பிரமாணங்கள் இன்றியமைந்ததாகும். பிரமாணம் என்பது உண்மை அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள் எனப்படுகின்றது. காட்சியளவை, அனுமானம், உரையளவை, இன்மையளவை, ஒப்பளவை, பொருட்பேறளவை, சம்பவம், ஐதீகம், இயல்பளவை மற்றும் ஒழிபளவை எனும் பத்து அளவைகள் அறிவைப் பெறுவதற்கான மூலங்களாக அறியப்படுகின்றது. பொதுவாக இதை பிரான்ஸிய, ஜேர்மனிய மெய்யியல் போன்ற அனைத்து மேலைத்தேய மெய்யியல் பிரிவுகளிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மெய்யியல் புலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணக்கருக்களில் ஒன்றாக காட்சி காணப்படுகின்றது. காட்சியானது அறிவின் ஊற்றுக்களில் மிகவும் முக்கியமானதாகவும் மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த ஐந்து புறப்புலன்களுடன் மனமாகிய அகப்புலனையும் சேர்த்தே இந்திய மெய்யியலாளர்கள் காட்சி பற்றிய ஆய்வினையும் நிகழ்த்துகின்றனர். இவ்வாய்வுக் கட்டுரையில் பூர்வ மற்றும் உத்தர மீமாம்சைகளில் எவ்வாறு காட்சி கொள்கை பற்றிய இயல்பினை பகுப்பாய்வு செய்தல் மற்றும் அதன் சொல்லாடல்களை பகுப்பாய்வு செய்து விமர்சிப்பதாக காணப்படுகிறது. குறிப்பாக காட்சியின் வகைகள், அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சிப் போக்கு, காட்சிக் கொள்கைப் பற்றிய விளக்கம் என்பன தொடர்பாக இவ்வாய்வானது அமையப் பெற்றுள்ளது. மேலும் இவ்வாய்வானது பண்பு ரீதியாகக் காணப்படுவதுடன், இங்கு இரண்டாம் நிலைத் தரவுகளான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றின் மூலமும், மூன்றாம் நிலைத் தரவுகளான இணையவழித் தரவு திரட்டல் முறையின் மூலமும்
கிடைக்கப்பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.