Abstract:
ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விடயங்களை ஆய்வுப் பொருளாகக் கொண்டு வளர்ச்சி பெற்று விளங்கும் ஒரு துறையாக மெய்யியல் துறை காணப்படுகின்றது. இந்த துறையானது பல்வேறு துறைகளிலும் பரிணமித்து விரிந்ததாக உள்ளது. அந்தவகையில் மெய்யியலின் பிரதான பிரிவுகளில் ஒன்றாக பெண்ணிய மெய்யியலைக் குறிப்பிடலாம்.
தற்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற ஒரு கலை வடிவமாக விளங்குகின்ற திரைப்படங்களில் வருகின்ற திரைப்படப் பாடல்களும் பெண்ணிய சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவனவாக அமைந்து விடுகின்றன. திரைப்பட பாடல்களில் பெண்களை ஆபாசமாகவும் போகப் பொருளாகவும் காண்பிக்கின்ற ஆண்மைய சிந்தனைகளைத் தான் சமூகத்தில் அனைவரும் விரும்புவதாகவும் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுப்பதாகவும் உள்ளமையினால் ஆண்மைய வாத வெளிப்பாடு முதன்மை பெற்றுக் காணப்படுகின்றது. எனவே இன்றைய திரைப்படப் பாடல்களில் ஆண்கள் பெண்களை பொழுதுபோக்கிற்கான காட்சிப்பொருளாக மட்டும் பார்க்கின்ற தன்மையைக் காண முடிகின்றது.
திரைப்பட பாடல்களை இதுவரை காலமும் எழுதியவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருந்தமையினால் திரையுலகில் பெண் பாடலாசிரியராக தாமரையின் அறிமுகம் அவரை முக்கியமான ஒருவராகக் காண்பிக்கின்றது எனலாம். பாடலாசிரியர் தாமரை பெண்களின் உணர்வுகளை மதிக்கும் விதத்திலான பெண்ணிய சிந்தனைகளைக் கொண்டவர் என்பதனாலும் ஒரு பெண் எப்படி உலகத்தைப் பார்க்கிறார் என்பதை இவருடைய பாடல்களில் நோக்கக் கூடியதாகவுள்ளதுடன் இவரது பாடல் வரிகளுக்கான மொழிப் பயன்பாட்டிலும் பெண்ணியத் தன்மையைக் காண முடிகின்றது.
பாடலாசிரியர் தாமரை தனது திரைப்பட பாடல் வரிகளில் பெண்ணிய நோக்கினை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதனையும், இவரது திரைப்பட பாடல்களில் ஏனைய ஆண் பாடலாசிரியர்களை விட எந்தளவிற்குத் தனித்துவமான பெண்ணிய சிந்தனைகளை வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதனையும் ஆராய்வதனை பிரதான நோக்கமாகவும், ஏனைய ஆண் பாடலாசிரியர்கள் பெண்மையினை வெளிப்படுத்தியிருப்பதைக் காட்டிலும் பாடலாசிரியர் தாமரையின் திரைப்பட பாடல்களில் பெண்மை பற்றிய வெளிப்பாடு கொண்டிருக்கும் சிறப்பு அம்சங்களை வெளிக் கொண்டுவருவதனையும் திரைப்பட பாடல் வரிகளில் பெண்களை ஆபாசமாக வெளிக்காட்டுவதன் மூலம் சாதிப்பது பெண்ணியம் அல்ல என்பதனை விளக்குவதனையும் பெண்மையின் சிறப்புத் தன்மையினை பாடல்களில் வெளிப்படுத்துவதனால் ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று சமமானவர்கள் என்பதனை உணர்த்துவதனையும் ஆண்களின் ஆண்மைய போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக தாமரையின் பாடல்கள் அமைந்துள்ளனவா? என்பதனை ஆராய்வதனையும் நோக்காகக் கொண்டு பாடலாசிரியர் தாமரையின் திரைப்பட பாடல்களில் பெண்மை பற்றி அதிகம் பேசுகின்ற குறிப்பிட்ட சில பாடல்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முறையியலில் தரவு சேகரித்தல், தரவு பகுப்பாய்வு செய்தல் போன்றவை அடிப்படையாக காணப்படுகின்றன. அதன் அடிப்படையில் இந்த ஆய்வின் முதலாம் நிலைத் தரவுகளாக பாடலாசிரியர் தாமரையின் திரைப்படப் பாடல்களில் இருந்து பெண்மையை அதிகம் வெளிப்படுத்துகின்ற குறிப்பிட்ட சில பாடல்களின் பகுப்பாய்வும், இரண்டாம் நிலைத் தரவுகளாக புத்தகங்கள், ஆய்வறிக்கைகள், சஞ்சிகைகள், கட்டுரைகள் போன்றவைகளும் மூன்றாம் நிலைத் தரவாக இணையத்தளங்களும் ஆய்விற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆய்வானது ஏனைய ஆண் பாடலாசிரியர்களின் பாடல்களில் காணப்படுகின்ற ஆண்மைய வாத சிந்தனைகளிலிருந்து வேறுபட்டதாக பாடலாசிரியர் தாமரை பெண்ணிய நோக்குகளை அவரது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதனை விளக்கும் வகையில் தாமரையின் பாடல்களில் குறிப்பிட்ட சில பாடல்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது. பெண் பாடலாசிரியர்கள் மட்டுமன்றி ஆண் பாடலாசிரியர்களும் பெண்ணிய சிந்தனைகளை பாடல்களில் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. சினிமா பரந்து விரிந்த ஒரு துறை என்பதனால் பெண்ணிய ஒடுக்குமுறைகள், பெண்கள் மீதான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் என்பன ஏற்படாது பெண்கள் மீது ஆண்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட வாய்ப்பினை ஏற்படுத்துவதாக இது அமையலாம்.