dc.description.abstract |
தமிழர் மெய்யியலின் ஆய்வு பொருண்மைகளில் திருக்குறள் மற்றும் நாலடியார் எனும் இரு பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்களும் தனித்துவமான இடத்தினை பெற்றுக் கொள்கின்றன. சங்கமருவிய கால அல்லது அறநெறிகால நூல்களாக இவை இரண்டும் அறியப்படுகின்றன. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பிரதான பகுதிகளையும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறள்கள் உள்ளடங்களாக நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. மொத்தமாக ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும், பாயிரவியல் கடவுள் வாழ்த்து தொடக்கம் அறன் வலியுறுத்துதல் வரையும், இல்லறவியல் இல்வாழ்க்கை தொடக்கம் புகழ் ஈராக இருபது அதிகாரங்களையும் கொண்டமைந்தது. இறுதியில் துறவறவியல் அருளுடைமை தொடக்கம் ஊழ் வரையும் அமைய பெற்றுள்ளது. இல்லறவியலில் இடம்பெறும் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், புதல்வரைப் பெறல், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல். செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், ஒப்பறிவறிதல், ஈகை, புகழ் என்னும் அதிகாரங்கள் இல்லறத்தின் தனித்துவமான விடயங்களை வெளிப்படுத்துகின்றது.
நாலடியார் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரதான பகுதிகளையும் அறத்துப்பாலில் இரண்டு இயல்களும், பொருட்பாலில் ஏழு இயல்களும், காமத்துப்பாலில் இரண்டு இயல்களுமாக மொத்தம் பதினொரு இயல்களில் நாற்பது அதிகாரங்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பாடல்கள் உள்ளடங்களாக நானூறு வெண்பா பாடல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. நாலடியாரின் அறத்துப்பாலில் உள்ளடங்கும் பொறையுடைமை, பிறர்மனை நயவாமை, ஈகை, பழவினை, மெய்ம்மை, தீவினை அச்சம் போன்ற அதிகாரங்களில் இல்லறம் தொடர்பான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனவேதான் நாலடியாரிலும் திருக்குறளிலும் இல்லறத்தின் சிறப்பு மற்றும் அதன் தனித்துவமான பண்புகளை பகுத்தறிந்து சிறந்த இல்லற வாழ்விற்கான அடையாளத்தினை இனங்கண்டு கொள்வதனை பிரதான நோக்கமாக கொண்டதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.
இதற்காக நாலடியார் மற்றும் திருக்குறளின் மூலநூல்களும் தெளிவுரைகளும் மற்றும் இவை தொடர்பாக இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களும் இரண்டாம் நிலைத் தரவுகளாக பயன்படுத்தப்பட்டு பண்பு சார்ந்த ஆய்வாக இவ்வாய்வு என்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இல்வாழ்க்கை பற்றிய பல பரிணாமங்களில் இருந்து மிகச்சிறந்த இல்வாழ்க்கையின் தனித்துவமான பண்புகளை வளர்ப்பதில் நாலடியார் மற்றும் திருக்குறளில் உள்ள தத்துவ சிந்தனைகள் எவ்வாறு பிரயோகிக்கப்பட முடியும்? என்ற ஆய்வுப் பிரச்சினையினை மையமாகக் கொண்டு இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாலடியாரிலும் திருக்குறளிலும் இல்வாழ்க்கையின் சிறப்பு எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன?, இல்வாழ்க்கையும் அதன் தனித்துவமான பண்புகள் பற்றி இவ்விரு நூல்களிலும் முன்வைக்கப்பட்டுள்ள முன்வைப்புக்களிலுள்ள தத்துவார்த்தப் போக்கு என்ன?, இல்வாழ்வான் மற்றும் இல்வாழ்வாளின் கடமை என்ன?, இல்லற வாழ்க்கையினை சிறப்படையச் செய்யத் தேவையான பண்புகள் தொடர்பாக இவ்விரு நூல்களிலும் முன்வைக்கப்பட்டுள்ள முன்வைப்புக்கள் எவை? என்பன குறித்த ஆய்வு வினாக்களுக்கு விடைகளை கண்டறியும் முயற்சியாக இவ்வாய்வு உள்ளது.
இவ்வாய்வின் மூலம் சிறந்த இல்வாழ்க்கையின் தனித்துவமான பண்புகளையும், இல்வாழ்க்கையின் முக்கியத்துவத்தினையும், சிறந்த கணவன் மற்றும் மனைவியின் கடமைகளையும், இன்றைய காலத்தில் இல்லற வாழ்க்கை சிறந்ததாக பேணப்பட வேண்டிய அவசியத்தினையும் குறித்து அறிந்துக் கொள்வதோடு இல்லற வாழ்விற்கான சரியான அர்த்தத்தையும் பண்டைய தமிழர் வாழ்வில் "இல்வாழ்க்கை எத்தகைய சிறப்பிடம் பெற்றிருக்கின்றது” என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும். |
en_US |