Abstract:
பெண்கள் எனும் போது அவர்கள் பலவீனமானவர்கள் என்ற கருத்தானது தவறு என வெளிப்படுத்தத்தக்க செயற்பாடுகளை தற்கால பெண்கள் உலகில் நிகழ்த்திக் கொண்டு வருகின்றனர். அதன்படியாக விண்வெளி வரையும் சென்று வந்த பெண்களின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில் இன்றளவு குறிப்பிட்ட பகுதிகளில் பெண் என்பவள் பல்வேறு இன்னல்களுக்கு அகப்பட்டு அதனால் பல்வேறு உடல். உள ரீதியான துன்புறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றாளென்பதே கவலைக்குரியதொன்றாகும். அதிலும் தனியாக வாழ்க்கை நடாத்தக் கூடிய பெண்தலைமைதாங்கும் குடும்பப் பெண்கள் எனும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். இப்படி எத்தகைய இன்னல்களுக்குட்பட்டாவது தாமும் நன்னிலை அடைய வேண்டுமென்பதன் பொருட்டும், தமது வாழ்விலும் சிறந்த நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்பதன் அடிப்படையில் அவர்கள் தாம் அன்றாட வாழ்வில் குறிப்பாக வேலைக்குச் செல்லக்கூடிய பெண்தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள் உளவியல், சமூக, பொருளாதார, பாலியல், குடும்பம் மற்றும் கலசார ரீதியாகவும் பல்வேறான பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்தாலும் அதற்கான தீர்வினை அறியாதவர்களாக அவர்கள் காணப்படுவது சற்று கவலைக்குரியதாகும்.
அதன்படி இத்தகைய பெண்களுக்கான ஒரு சிறந்த தீர்வை முடிந்தளவு பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதன் நோக்கிலாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட செங்கலடி 01 கிராம சேவகர் பிரிவினில் காணப்படும் கிராமங்களில் வாழ்ந்து வரும் பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்கள் தமது அன்றாட வாழ்வில் உளவியல். சமூக, பொருளாதார, பாலியல், குடும்பம் மற்றும் கலசார ரீதியான பல பிரச்சினைளை எதிர்கொள்கின்றனர் என்பதை அறியக்கூடியதாக இருந்தது. அத்தகைய பிரச்சினைகள் குறித்ததான தீர்வை பெற்றுத்தரும் நோக்கிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகவே இவ்வாய்வு காணப்படுகின்றது. அதன்படி எனது ஆய்வானது "பெண் தலைமைத்துவ குடும்பங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் செங்கலடி 01 கிராம சேவகர் பிரிவினை
அடிப்படையாகக் கொண்டதான பெண்ணிய மெய்யிய நோக்கு" என்பதாக
அமைகின்றது. இவ்வாறான பிரச்சினைகள் குறித்து நேரில் சென்று கள ஆய்வு, நேர்காணல் மற்றும் வினாக்கொத்து முறை அவதானம் என்பவற்றிகமைவாக பெற்றுக்கொண்டதான தரவுகளின் அடிப்படையில் உரிய தீர்வுகளை முன்வைக்க் கூடிய வகையிலாக இவ்வாய்வு அமைகின்றது.
இவ்வாய்வானது மொத்தமாக ஐந்து அத்தியாயங்களைக் கொண்டமைந்துள்ளது. முதலாவது அத்தியாயத்தில் ஆய்வு தொடர்பான விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்படியாக, ஆய்வுத்தலைப்ப, ஆய்வு அறிமுகம், ஆய்வு முக்கியத்துவம், ஆயுயவுப்பிரச்சினை, ஆய்வின் நோக்கம், ஆய்வுக்கருதுகோள், ஆய்வு வினாக்கள், ஆய்வு முறையியல், ஆய்வு வரையறை, இலக்கிய மீளாய்வு, அத்தியாய ஒழுங்கு முறை என்பன காணப்படுகின்றன.
மேலும் ஆய்வின இரண்டாவது அத்தியாயமானது இலக்கிய மீளாய்வு ஆகும். இவ்வாய்வுடன் தொடர்பு பட்ட வகையில் ஏற்கனவே வெளிவந்த நூல்கள், இலக்கியங்கள், அறிக்கைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பனவற்றை ஆய்வுக்குட்படுத்தி மீளாய்வு செய்வதாக காணப்படுகின்றது. இத்தகைய இலக்கிய மீளாய்வு எனும் விடயமானது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டதான ஆய்வுகளினை அறிந்து கொண்டு அதில் விடுபட்ட அம்சங்களினை ஆய்வுக்குட்படுத்தும் வகையிலாக வழிவகுக்கின்றது.
மேலும் ஆய்வின் மூன்றாவது அத்தியாயமானது இவ்வாய்வினது ஆய்வு முறையியல் தொடர்பாக விளக்குவதாகக் காணப்படுகின்றது. செங்கலடி கிராமம் தொடர்பிலான அறிமுகம் மற்றும் அப்பிரதேசத்தினது பௌதீகக்கட்டமைப்பு. ஆய்வுப்பிரதேச சமூகக் கட்டமைப்பு மற்றும் மாதிரி தெரிவு முறை, ஆய்வுக்கருவி, கருவிகளின் நம்பகத்தன்மை, தரவுகளின் பகுப்பாய்வு, தொகுப்புரை என்பனவற்றை உள்ளடக்கிய வகையிலாகக் காணப்படுகின்றது.
ஆய்வின் நான்காவது அத்தியாயமானது தரவுப்பகுப்பாய்வு மற்றும் கலந்துரையாடல் என்பனவற்றையும் கூறுவதாகவுள்ளது. அதன்படியாக பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து அதனூடாக பிரச்சினைகளை இனங்காணும் வகையிலாகக் காணப்படுகின்றது.
அத்தியாயம் ஐந்தானது பகுப்பாய்வினூடாகப் பெறப்பட்ட பிரச்சினைகளினை கூறுவதுடன் அப்பிரச்சினைக்கு ஆய்வாளரால் முன்வைகக்கூடிய தீர்வுகளையும், ஆலோசனைகளையும் கூறி உரிய முடிவுரையினையும் கூறுவதாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் ஆய்வுச்சுருக்கமானது ஆய்வொன்றில் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.