Abstract:
கல்விக்கேற்ப சிறந்த தொழில்களைப் பெறுவதென்பது வினைத்திறனான தொழில் வழிகாட்டல் வகிபங்கிலேயே தங்கியுள்ளது. மாணவர்களின் எதிர்கால தொழிற்கல்வி மேம்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் விடயங்களை இனங்கண்டு வழிகாட்டல் செயற்பாட்டினை மேற்கொள்வது பாடசாலைக் கல்விச் சமூகத்தின் பொறுப்பாகும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி தொடர்பில் விழிப்புணர்வைக் கொடுக்கவும், எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ப அவர்களை தயார் செய்யவும் பாடசாலையில் கொண்டு வரப்பட்ட 13 வருட உத்தரவாதக் கல்வியை அறியவும் இவ்வாய்வு உதவியாக இருக்கும். இவ்வாய்வின் முக்கிய நோக்கமாக மாணவர்களின் தொழிற்கல்வி மேம்பாட்டில் 13 வருட உத்தரவாதக் கல்வியின் செல்வாக்கினைக் கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்கான விதப்புரைகளை முன்மொழிவதாகும். இதற்காக மட்டக்களப்பு மாவட்ட மட்டக்களப்பு கல்வி வலயம் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களை அடிப்படையாகக் கொண்ட பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதக் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் 04 LAB பாடசாலைகளை மையமாக கொண்டு அதிலுள்ள 04 அதிபர்களும், 38 ஆசிரியர்களும், 104 மாணவர்களும் நோக்க மாதிரித் தெரிவாக தெரிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அளவு மற்றும் பண்பு ரீதியான தரவுகளைப் பெறுவதற்கேன வினாக்கொத்து, நேர்காணல் மூலம் பல தரவுகள் சேகரிக்கப்பட்டு அவை அட்டவணைகள், உருக்கள் என்பன மூலம் விபரணப்படுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளன அதனூடாகப் பல முடிவுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வின் கண்டறிதல்களாக மாணவர்களின் எதிர்கால தொழிற்கல்வியை தீர்மானிப்பதில் 13 வருட உத்தரவாதக் கல்வி செல்வாக்குச் செலுத்துவதையும், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் வழங்காமை, தொழிற்கல்வியில் உள்ள சவால்கள், ஆசிரியர்களது வழிகாட்டல் வகிபங்கு வினைத்திறனாக காணப்படாமையும் அறியப்பட்டுள்ளன. இந்நிலையை தவிர்த்து எதிர்கால தொழிற்கல்வியில் செல்வாக்கினை மேம்படுத்தி பொருத்தப்பாடுடைய தொழில்கல்வியைப் பெறுவதற்கு 13 வருட உத்தரவாதக் கல்வியின் வழிப்படுத்தல்களை ஆசிரியர்கள் தக்க பயிற்சியுடன் செயற்றிறன் வாய்ந்ததாக மேற்கொள்ள வேண்டும் என்பது இவ்வாய்வுக்கான விதப்புரைகளாகும்.