Abstract:
க.பொ.த. சாதாரண தர இடைவிலகலை இலக்காகக் கொண்டு 2017 ஆம் ஆண்டு தரம் 12,13 பாடத்திட்டத்தில் 13 வருட உத்தரவாத கல்வி திட்டத்தை இலங்கையின் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியது. இத்திட்டமானது க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. இருப்பினும் இந்நிகழ்ச்சித் திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்பவர்களின் எண்ணிக்கை பின்னடைவான நிலையிலேயே காணப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு 13 வருட உத்தரவாதக் கல்வியில் மாணவர் ஆர்வம் எவ்வாறான நிலையில் உள்ளது என்பதனைக் கண்டறியும் நோக்கில் இவ் ஆய்வானது இடம்பெற்றுள்ளது. இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயங்களில் தற்போது 13 வருட உத்தரவாதக் கல்வித்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும் 06 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து 6 அதிபர்கள், இத்திட்டத்தில் கற்பித்தலை மேற்கொள்ளும் 40 ஆசிரியர்கள் மற்றும் இத்திட்டத்தில் கல்வியைத் தொடரும் 90 மாணவர்கள் நோக்க மாதிரி அடிப்படையிலும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் 30 சதவீதமான பெற்றோர்கள் ஒதுக்கீட்டு மாதிரி அடிப்படையிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஆய்விற்கான தரவுகளை சேகரிப்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வினாக்கொத்தும், அதிபர்கள் மற்றும் பெற்றோருக்கு நேர்காணல் படிவமும் வழங்கப்பட்டது. பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் Microsoft Excel ஊடாக அட்டவணைகள், வரைபுகள் மூலம் விபரணப்படுத்தப்பட்டு இலக்கிய மீளாய்வுகளுடன் தொடர்புபடுத்தி வியாக்கியானம் செய்யப்பட்டு முடிவுகளும் விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நடைமுறையானது தற்போது மந்த நிலையில் காணப்படுவதுடன் மாணவர் ஆர்வமும் குறைவாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் குடும்பம், கற்பித்தல் முறை, கற்பித்தல் சாதனங்கள், சமூக மதிப்பு நிலை, தாழ்வு மனப்பான்மை, கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி, வேலை உலகிற்கும் கல்விக்கும் காணப்படும் இடைவெளி, சகபாடித் தொடர்புகள் என பல காரணிகள் மாணவர் ஆர்வத்தை குறைத்துள்ளமை முடிவாக பெறப்பட்டுள்ளன. இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல், பகுதி நேர தொழில் புரிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தல், கற்றலை பூர்த்தி செய்ததுடன் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல், கட்டாயக் கல்வியாக மாற்றுதல் போன்றன விதப்புரைகளாக
முன்மொழியப்பட்டுள்ளன.