dc.description.abstract |
மனிதன் பரிணமித்தது முதல் அவன் வாழ்வின் ஒவ்வொரு படிக்கல்லும் ஓர் சுழல் வட்டப் பாதையிலேயே சுற்றித்திரிகின்றது. இந்த சுழற்சியானது காரணகாரிய தத்துவமாக காணப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் ஓர் காரணம் இருக்கின்றது என்ற கொள்கை ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் அடிப்படையாய் காணப்படுகின்றது. இவ்வாறு காரணம் இல்லாமல் ஒரு செயல் நடைபெறாது எனக் கூறுவதே காரணகாரிய வாதம் ஆகும். இத்தகைய காரணகாரிய தத்துவ சிந்தனையானது பௌத்த சமயத்தில் பேசு பொருளாக காணப்படுகின்றது.
இதனடிப்படையில் அஞ்ஞானத்தைப் போக்கி மெஞ்ஞானச் சுடரை ஏற்றும் தீபம் என்ற வகையில் பௌத்த மதத்திற்கு ஓர் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் இத்தத்துவத்தில் மனித வாழ்க்கைச் சக்கரமானது காரணகாரியத்துடன் தொழிற்படுகின்றது என வலியுறுத்தியுள்ளது. மேலும் இத்தத்துவத்தில் அனைத்திற்கும் காரணம் துன்பம் என்றும் அத்துன்பத்தை நீக்கும் பேரொளியைப் பற்றியும் விளக்கிக் காட்டியுள்ளது. இவ்வாறாக பௌத்த தத்துவத்தில் காரணகாரிய கருத்துக்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
தொடர்ந்து பௌத்தத்தில் கூறப்பட்டுள்ள காரணகாரிய வாதத்தை சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்ட சுவை நயம் மிகுந்த செந்தமிழ் நூலாகவும் அமுத சுரபியாகவும் திகழும் மணிமேகலையை அடிப்படையாகக் கொண்டு பகுப்பாய்வு செய்வதாக இந்த ஆய்வு அமைகின்றது. அந்த வகையில் பெண் பாத்திரத்தை தலைமை கதை மாந்தராகக் கொண்டு நூலாசிரியர் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் காரணமாய் அமைகிறது என்றும் இது சங்கிலி வட்டப் பாதையில் நிகழ்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
அந்த வகையில் இந்த ஆய்வில் பௌத்தத்தின் காரணகாரிய தத்துவம் மணிமேகலையில் காணப்படும் காரணகாரிய வாதத்துடன் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பது பற்றி விளக்கி நிற்கின்றது. மேலும் இவை இரண்டிற்கும் இடையிலான ஒற்றுமைகள், வேற்றுமைகள் நன்கு பகுத்தாராயப்பட்டு முன்வைக்கப்படுள்ளன. தொடர்ந்து எந்தவொரு ஆய்வினையும் முடிவுகள் சிறப்புற மேற்கொள்வதற்கு ஆய்வுப் பிரச்சினை அடிப்படையானதே. அந்த வகையில் இவ்வாய்வின் பிரச்சினைக்குரிய வினாவின் விடையும் அதில் காணப்படும் பிரச்சினைக்குரிய தீர்வினை எட்டும் முகமாக அதன் இலக்கினை அடைந்த தன்மையானது தெளிவாகப் புலனாகின்றது.
இவ்வாய்வானது பண்பு ரீதியாக ஆராயப்பட்டதோடு இங்கு இரண்டாம் நிலைத்
தரவுகளான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரைகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றின்
மூலமும், மூன்றாம் நிலைத் தரவுகளான இணையவழித் தரவு திரட்டல் முறையின்
மூலமும் கிடைக்கப் பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே இவ்வாய்வு
மேற் கொள்ளப்பட்டுள்ளது |
en_US |