Abstract:
எந்த ஒரு நாட்டின் முழுமையான அடிப்படை வளர்ச்சிக்கும் கலவியே இன்றியமையாத கருவியாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே கன்னங்கரா அவர்களினால் இலவசக் கல்வியானது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இலவசக் கல்விக் கொள்கையினால் ஆரம்ப நிலைப் பாடசாலைக்குச் செல்கின்ற அனைத்துக் குழந்தைகளும் கல்வியறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதால் தெற்காசியாவில் அதிகளவு கல்வியறிவு உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இருப்பினும் வழங்கப்படுகின்ற கல்வி வாய்ப்புக்களில் தரமான கல்வியைப் பெற்றுக் கொள்வதில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. இலங்கையில் குறைந்த வருமானங்களைப் பெறுகின்ற குடும்பங்கள் போன்ற பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் கல்வியில் சமூக ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றது.
ஜனநாயக இலங்கை இலவசக் கல்விக்குப் புகழ்பூத்த நாடாக இருந்தும் கூட இன்று அந்த இலவசக் கல்வி கூட பண பலம் படைத்தவனுக்கே இலகுவாக கிடைப்பனவாக இருக்கும் என்ற எழுதப்படாத நியதியே இன்றைய சமகாலத்தில் மறுக்கப்படாத உண்மையாக காணப்படுகின்றது. இத்தகைய நிலையானது சமகாலத்தில் சமூகங்களில் பாரிய பிரச்சினையினை ஏற்படுத்தி வருவது மட்டுமல்லாது எதிர்காலத்தில் கல்வியை பணத்திற்காக விற்கும் பண்டப் பொருளாகப் பார்க்கின்ற நிலைக்கு போவதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. இதனடிப்படையில் நடுத்தர வர்க்கத்தினராலோ, உயர்ந்த வர்க்கத்தினராலோ ஏழை மாணவனின் உணர்வுகளைப் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டிய கல்வி ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படை உரிமையான கல்வி அனைவருக்கும் சமத்துவமான முறையில் கிடைப்பதில்லை.
சமகாலத்தில் தனியார் வகுப்புக்களின் அதிகரிப்பானது பாடசாலைகளின் கல்வி முறைகளை கேள்விக்குட்படுத்தும் நிலையினை உருவாக்கி வருகின்றது. அதுமட்டுமன்றி பாடசாலைக் கற்றலில் நம்பிக்கையின்மை இலகுவாக உருவாக்கப்படுகின்றது. அரச பாடசாலைகளில் கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களாலும் தனியார் வகுப்புக்களுக்குச் சென்று தம் கற்றலை மேற்கொள்ள முடியாது. நாளாந்த அடிப்படை வசதிகளையே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கு தனியார் வகுப்புக்கள் ஆடம்பரப் பண்டமே ஆகும். அரச பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற அதே ஆசிரியர்கள் தான் தனியார் வகுப்புக்களிலும் கற்பித்து வருமானத்தை பெற்றுக் கொள்கின்றனர்.
திறமையான ஏழை மாணவர்கள் கூட. பரீட்சையில் சித்தியடைய பாடசாலைக் கல்வி மட்டும் போதாது என்ற மனநிலையினை தங்களுக்குள் விதைத்துக் கொண்டு தங்களின் முயற்சிகளினை கைவிடும் அளவிற்கு இன்றைய புறச்சூழல் தாக்கம் செலுத்துகின்றது. பரீட்சையில் வெற்றியடைகின்ற மாணவர்களினது வெற்றியினை உரிமை கோருகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் அதே நிறுவனத்தில் கல்வி கற்று பரீட்சைகளில் தோல்வியடைந்த மாணவர்களின் தோல்விக்கான காரணங்களை மாணவர்கள் மீதே திணிக்கின்றனர். ஆசிரியர் சேவை என்பது வெறுமனே சம்பளம் பெறுவதற்கான ஒரு வழிமுறையல்ல மாறாக அது பல்வேறு மாணவர்களின் எதிர்காலத்தினை வளப்படுத்தும் ஓர் உன்னதமான ஊக்கியே ஆகும். ஆனால் சமகாலத்தில் பணத்தினை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறையே அதிகளவில் காணப்படுகின்றது. இதனடிப்படையில் சமகாலத்தில் மாணவர்களின் கல்வியில் தனியார் வகுப்புக்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை மெய்யியல் ரீதியாக நோக்குவதனை அடிப்படையாக கொண்டதாக இந்த ஆய்வு காணப்படுகின்றது.
இதனை மையமாகக் கொண்டு இந்த ஆய்வானது "சமகாலத்தில் மாணவர்களின் கல்வியில் தனியார் வகுப்புக்களின் தாக்கம் ஓர் விமர்சனக் கோட்பாட்டு மெய்யியல் நோக்கு" எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தவகையில் குறித்த பிரச்சினைகளை இனங்காணும் நோக்கிலும் அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் நோக்கிலும் இவ்வாய்வு அமைகின்றது.
இவ்வாய்வானது ஆறு அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது அத்தியாயத்தில் ஆய்வு எந்த பிரச்சினையை மையப்படுத்தி, 61601601 நோக்கத்திற்காக, எந்தெந்த முறையியலினூடாக மேற்கொள்ளப்படுகின்றது என்பதை விளக்கும் ஆய்வு அறிமுகமாகவும் ஆய்வுப் பிரச்சினை, ஆய்வின் நோக்கம், ஆய்வுக் கருதுகோள், ஆய்வுக் கோட்பாடு, ஆய்வு முறையியல், தரவுசேகரிக்கும் முறைகள், இலக்கிய மீளாய்வு, போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. மேற்கொள்ளப்போகும் ஆய்வு தொடர்பான அறிவினைப் பெறுவதற்கு இவ் அத்தியாயம் உதவுகின்றது.
ஆய்வறிக்கையின் இரண்டாவது அத்தியாயத்தில் இலக்கிய மீளாய்வு ஆகும். இவ் ஆய்வுடன் தொடர்புடைய ஏற்கனவே வெளிவந்த புத்தகங்கள், சஞ்சிகைகள்,பத்திரிகைகள் போன்றவற்றினை ஆய்வுடன் தொடர்புபடுத்தி மீளாய்வு செய்வதனைக் குறிக்கும். இலக்கிய மீளாய்வின் மூலம் தான் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினை அறிந்து கொள்வதுடன். ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளில் தவறவிடப்பட்ட விடயங்களினை ஆய்வு செய்ய வழிவகுக்கின்றது.
மூன்றாவது அத்தியாயத்தில் ஆய்வுப் பிரதேசம் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கோப்பாய் கிராமத்தைப் பற்றிய அறிமுகத்தினை வழங்குகின்றது. ஆய்வுப் பிரதேசத்தின் மக்கள் தொகை தொடர்பான விடயங்களினையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. நான்காவது அத்தியாயத்தில் ஆய்வுமுறையியல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாவது அத்தியாயத்தில் தரவுப் பகுப்பாய்வும் கலந்துரையாடலும் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரச்சினைக்கான மாதிரித் தெரிவுகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளினைப் பகுப்பாய்வுக்குட்படுத்தி பிரச்சினைகளை இனங்காண்பதாகும்.
ஆறாவது அத்தியாயமானது பகுப்பாய்வின் மூலம் பெறப்பட்ட பிரச்சினைகளைக் கூறுவதுடன்
பிரச்சினைக்கு ஆய்வாளனால் முன்வைக்கப்படும் தீர்வாலோசனைகளையும், இவ்வாய்வு
தொடர்பான முடிவினையும் கொண்டிருக்கும். எனவே ஆய்வுச் செயற்பாட்டில் முக்கியமானதாக
விளங்கும். இவ்வாய்வுச் சுருக்கமானது ஆய்வறிக்கை தொடர்பாக முழுமையாக விளங்கிக்
கொள்ள உதவுகின்றது