dc.description.abstract |
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்ற காரணிகளுள் நாணயமாற்றுவீதம் மற்றும் வெளிநாட்டு உதவி என்பவை முக்கியமானதாகக் காணப்படுகின்றன. நாணயமாற்று வீத பெறுமதியிறக்கம் ஏற்றுமதியை அதகரித்து சர்வதேச சந்தைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. அவ்வாறே காலத்திற்கு காலம் இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற அரசியல், சமூக பொருளாதார மாற்றங்கள் அல்லது இடர்பாடுகளினால் வெளிநாட்டு உதவியின் உள்வருகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டும் வருகின்றன. எனவேதான் இவ்விரு மாறிகளுக்கிடையிலான தொடர்பை கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாகும். 1985 2021 வரையிலான வருடாந்த காலத்தொடர் தரவுகளைக்கொண்டு இலங்கையின் நாணயமாற்றுவீதம் மற்றும் வெளிநாட்டு உதவி என்பவற்றிற்கிடையிலான தொடர்பை ஆராய்வதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வாய்வானது இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுகள் Eviews கணினி மென்பொருளின் துணையுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்வில் நாணயமாற்றுவீதம் சார்ந்த மாறியாகவும் வெளிநாட்டு உதவி பிரதான சாரா மாறியாகவும் ஏனைய சாராமாறிகளான வெளிநாட்டு நேரடி முதலீடு, பொதுபடுகடன், பணவீக்கம், வர்த்தக விநியோகம், மொத்த தலாவருமானம், பணநிரம்பல், திறந்த வர்த்தகம் போன்ற மாறிகளைக் கொண்டு 3 மாதிரிகளாகப் பிரிக்கப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வில் ARDL மாதிரியுருவை அடிப்படையாகக் கொண்டு மாறிகளுக்கிடையிலான தொடர்பினை பரீட்சிப்பதற்காக விபரண புள்ளிவிபரவியல் நுட்பம் (Descriptive Statistics), அலகு மூலச் சோதனை (Unit root test) மற்றும் வழுச்சரிப்படுத்தல் மாதிரி (Error Correction Model) போன்ற பொருளியலளவை முறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் பகுப்பாய்வுப் பெறுபேறுகளின்படி, மாதிரி 1 இல் நிகழ்காலத்தில் நாணயமாற்றுவீதம் மற்றும் வெளிநாட்டு உதவிக்கும் இடையே நீண்டகாலத்தில் நேர்கணியத்தொடர்பும் குறுங்காலத்தில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், மாதிரி 2 இல் நிகழ்காலத்தில் இவ்விரு மாறிகளுக்குமிடையே நீண்டகாலத்திலும் குறுங்காலத்திலும் எதிர்கணிய தாக்கம் இருப்பதாகவும் மாதிரி 3 இல் இவ்விரு மாறிகளுக்குமிடையே நீண்டகாலத்தில் எதிர்கணியத்தொடர்பும் குறுங்காலத்தில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெளிவான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. |
en_US |