Abstract:
ஒரு நாடு இன்னொரு நாட்டின் தொடர்பின்றி சர்வதேச ரீதியில் தனித்து இயங்குவது என்பது இயலாத காரியம். சர்வதேச உறவுகளில் பங்கெடுப்பதற்கு ஏற்றவகையிலான இராஜதந்திர நுட்பங்களை கையாண்டு ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு தனியான வெளிநாட்டுக் கொள்கையை கொண்டு இயங்கி வருகின்றது. இதனடிப்படையிலேயே நரேந்திர மோடியுடைய வெளியுறவு கொள்கையும் இலங்கையுடனான இராஜதந்திர தொடர்பும் காணப்படுகின்றது. பல நூற்றாண்டு காலமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, கலாசார ரீதியிலான தொடர்புகள் இருந்து வந்துள்ளன. மேலும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகளவான நலன்களை இந்தியா கொண்டிருப்பதனால், தனது நலன்களை பேணுவதற்கும் தனது இலக்கை அடைவதற்கும் இலங்கையுடனான இணைப்பு இந்தியாவிற்கு அத்தியவசியமானதாகும். இதனால் இந்தியா ஆரம்பகாலத்தில் இருந்து இன்று வரை இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றது. இந்நிலையில், இலங்கையில் சீனாவுடைய ஆதிக்கமானது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு, தேசிய நலன் மற்றும் அதன் இலக்குக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதன் பின்னணியில், இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கினை சவாலுக்குட்படுத்தும் வகையிலான மோடியின் இராஜதந்திரம் மிகுந்த செயற்பாடுகளைக் கண்டறிவதே இவ்வாய்வினுடைய நோக்கமாகும். இவ்வாய்வானது முதலாம் நிலைத்தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் என்பவற்றைப் பயன்படுத்தி விபரண முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்த முனையும் சூழலில் இந்தியா பொருளாதார ரீதியில் பல்வேறு உதவிகள் செய்து இலங்கையின் எழுச்சிக்குக் கைகொடுக்கும் விதத்தில் செயல்படுவதன் மூலம் தனது செல்வாக்கினைப் பலப்படுத்துவதோடு. அதிகரித்த உதவிகளின் மூலம் சீனாவை விட இந்தியாவே இலங்கையின் மீது கரிசனை கொண்டுள்ளது என்பதையும், இலங்கைக்கான உதவிகள் தேவைப்படும் போது முதலில் வந்து துணை நிற்பது இந்தியாவாகும் என்பதையும் நிரூபிக்க முயற்சிக்கின்றது. இருப்பினும் பிராந்தியத்தில் சீனா தொடர்பான அச்சங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆகவே, இந்தியா தனது தந்திரோபாயத்தை மாற்றிக் கொள்ளாதவரை நெருக்கடிகால சூழல் என்பது தவிர்க்க முடியாததாகவே அமையும். சீனா ஆய்வுகளையும் அதற்கான இராணுவ கட்டமைப்புக்களையும் வலுப்படுத்தும் போது இந்தியா இராஜதந்திர விஜயங்களையும் உரையாடல்களையும் மட்டுமே மேற்கொள்வதனால் அதிக மாற்றத்தை அடைந்துவிட முடியாது என்பதை கருத்தில் கொண்டு தனது இராஜதந்திர ரீதியிலான
உயர்மட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.